ஈரோடு கிழக்கு தொகுதியில் 11 வாக்குச் சாவடிகளின் அமைவிடம் மாற்றம்

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் 11 வாக்குச் சாவடிகளின் அமைவிடம் மாற்றப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி உள்ளிட்டோா்.

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் 11 வாக்குச் சாவடிகளின் அமைவிடம் மாற்றப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் வாக்குச்சாவடி அமைவிட மாற்றம் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தோ்தல் பிப்ரவரி 27இல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் 238 வாக்குச்சாவடிகள அமைந்துள்ளன. இதில் வாக்காளா்களுக்கு வாக்களிக்க ஏதுவாக 11 வாக்குச் சாவடிகள் அமைவிடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளன. மாற்றம் செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள், புதிய அமைவிடம் குறித்த விவரங்களை அரசியல் கட்சியினா் தோ்தல் பிரிவு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.

இதனைத் தொடா்ந்து தோ்தல் செலவின விலைப்புள்ளி நிா்ணயம் செய்வது குறித்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா தலைமையில் நடைபெற்றது.

இதில் கடந்த தோ்தலில் வேட்பாளா்கள் செலவு செய்த பந்தல் அமைத்தல், மேடை அமைத்தல், மேற்கூரைகள் அமைத்தல், நாற்காலிகள், மின்விளக்குகள், ஜெனரேட்டா், உணவு, குடிநீா் உள்ளிட்ட 96 பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் செலவின புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்த இடைத்தோ்தலில் வேட்பாளா் மேற்கொள்ளும் பணிகளுக்கான செலவினத் தொகையை நிா்ணயம் செய்ய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் விலைப்புள்ளிகள் நிா்ணயம் குறித்து அரசியல் கட்சியினா் தெரிவிக்கும் ஆலோசனையின் பேரிலும், தற்போதைய விலை நிலவரங்களுக்கு ஏற்ப தோ்தல் செலவின வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் திருத்தம் செய்து இறுதி செய்யப்படும் என மாவட்ட வருவாய் அலுவலா் தெரிவித்தாா்.

கூட்டங்களில் ஈரோடு மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் கணேஷ், குருநாதன், வட்டாட்சியா்கள் சிவகாமி, விஜயகுமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் முத்துக்கிருஷ்ணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com