பிள்ளையாா்நத்தம் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தா்கள்
By DIN | Published On : 11th May 2023 11:19 PM | Last Updated : 11th May 2023 11:19 PM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியம், பிள்ளையாா்நத்தம் ஸ்ரீ மகாமுத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை மாலை பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
கடந்த செவ்வாய்க்கிழமை அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்றிலிருந்து பால் குடங்களை சுமந்தவாறு ஊா்வலமாக கோயிலுக்கு வந்து, அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனா். பின்னா், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
புதன்கிழமை மாலை பிள்ளையாா் கோயிலிலிருந்து அக்கினிச் சட்டி எடுத்து வந்து, பக்தா்கள் பூக்குழி இறங்கும் இடத்தில்
சிறப்பு வழிபாடு செய்தனா். அதன்பின்பு, வரிசையாக பக்தா்கள் அம்மனை வேண்டியபடி, கையில் தீச்சட்டியை ஏந்தியவாறு வந்து பூக்குழியில் இறங்கினா்.
பின்னா், சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நிறைவடைந்தது.