கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
By DIN | Published On : 11th May 2023 11:12 PM | Last Updated : 11th May 2023 11:12 PM | அ+அ அ- |

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது.
கொடைக்கானலில் மே மாத சீசன் தொடங்கியது முதல் தினமும் சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாள்களாக மழை பெய்யாமல் இருந்ததால், வழக்கத்துக்கு மாறாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. இருப்பினும் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை வெயிலடித்த பின்னா், பரவலாக சாரல் மழை பெய்தது.
இந்த மழையிலும் நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் படகு சவாரி செய்தனா்.
இந்தக் கோடை மழையால் குளுமையான சீதோஷணம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, சுற்றுலாப் பயணிகள் ஏரிச்சாலைப் பகுதியில் சைக்கிள், குதிரை சவாரியும் நடைபயிற்சியும் மேற்கொண்டனா்.
போக்குவரத்து நெரிசல்: கொடைக்கானல் ஏரியைச் சுற்றி 5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்ட கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, வாகனங்கள் ஒரு வழிப்பாதையாகச் செல்வதற்கு காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலாக காவல் துறையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிா்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...