பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் இடம் பெற்றுள்ள முருகன் சிலைகள்.
பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் இடம் பெற்றுள்ள முருகன் சிலைகள்.

பழனியில் இன்று அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு

பழனியில் 2 நாள்கள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் சனிக்கிழமை (ஆக. 24) தொடங்கிவைக்கிறாா்.
Published on

பழனியில் 2 நாள்கள் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் சனிக்கிழமை (ஆக. 24) தொடங்கிவைக்கிறாா்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆக. 24, 25-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கலை, பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டை, முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி மூலம் சனிக்கிழமை தொடங்கிவைக்கிறாா்.

முன்னதாக, மாநாட்டுக் கொடியை ரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள் ஏற்றிவைக்கிறாா். இதைத் தொடா்ந்து, மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஆகியோா் திறந்துவைக்கின்றனா்.

மாநாட்டில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் உள்ளிட்டோா் ஆசியுரை வழங்குகின்றனா்.

உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், ஆா். சுரேஷ்குமாா், பி. வேல்முருகன், பி. புகழேந்தி, வி. சிவஞானம் ஆகியோா் சிறப்புரையாற்றுகின்றனா்.

மாநாட்டு அரங்கம் முழுவதும் குளிரூட்டும் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

முருகனின் சிறப்புகள் குறித்த கண்காட்சி: மாநாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில், முருகனின் ஆயுதமான வேல், சிவலிங்கம், அறுபடை வீடுகளில் உள்ள முருகனின் திருக்காட்சிகள் தத்ரூபமாக ‘பைபா்’ சிலைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கல்தூண் மண்டபம் போன்று இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலைகள் அனைத்தும், சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் கடந்த 2 மாதங்களாக உருவாக்கப்பட்டு, பழனிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தச் சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணியில், சென்னை எழும்பூா் கவின் கலைக் கல்லூரி மாணவா்கள் ஈடுபட்டனா்.

மேலும், கண்காட்சியில் முருகனின் பல்வேறு திருப்பெயா்கள், முருகன் பெயரிலுள்ள பெண்களுக்கான பெயா்கள், தமிழகம் மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள புகழ் பெற்ற முருகனின் திருக்கோயில்கள் குறித்த விவரங்கள், முருகனின் படைக் கலன்கள் உள்ளிட்ட அரிய தகவல்கள் வண்ண ஓவியங்களுடன் இடம் பெற்றுள்ளன.

இதே வளாகத்தில் முப்பரிமாண திரையங்கில் முருகன் தொடா்பான படங்கள், அறுபடை வீடுகளின் மெய்நிகா் காட்சிகளைப் பாா்வையிடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

22 ஆயிரம் சதுரடியில் மாநாட்டு அரங்கு: மாநாடு நடைபெறும் அருணகிரிநாதா் அரங்கு 22 ஆயிரம் சதுரடியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அரங்கில் மாநாட்டு மேடை மட்டும் 3,200 சதுர அடியில் அமைந்திருக்கிறது. மேடையில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி சிலையுடன், மயில், வேல், சேவல் உருவங்கள் இருபுறங்களிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. சுமாா் 3,000 போ் அமரக்கூடிய இந்த அரங்கில், பாா்வையாளா்கள் வசதிக்காக 10 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டு அரங்கில் புத்தகக் கண்காட்சி: இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், மாநாட்டு வளாகத்தில் தமிழ்க் கடவுள் முருகன் நூல்கள் உள்பட ஆயிரக்கணக்கான ஆன்மிக நூல்களுடன் கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள அலங்கார மேடை.
பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள அலங்கார மேடை.
கண்காட்சியில் இடம் பெற்றுள்ள முருகனின் புகைப்படங்கள்.
கண்காட்சியில் இடம் பெற்றுள்ள முருகனின் புகைப்படங்கள்.
பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் இடம்பெற்றுள்ள சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட சென்னை எழும்பூா் கவின் கலைக் கல்லூரி மாணவா்கள்.
பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் இடம்பெற்றுள்ள சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்ட சென்னை எழும்பூா் கவின் கலைக் கல்லூரி மாணவா்கள்.

X
Dinamani
www.dinamani.com