2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பிற மாநிலங்களும் பின்பற்றும் சிறப்பான திட்டம் காலை உணவுத் திட்டம்: அமைச்சா் இ. பெரியசாமி

பிறமாநிலங்களும் பின்பற்றும் சிறப்பானதிட்டமாக மாறிவிட்டது காலை உணவுத் திட்டம் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

நிலக்கோட்டை/ஒட்டன்சத்திரம்/நத்தம்/பழனி: பிறமாநிலங்களும் பின்பற்றும் சிறப்பானதிட்டமாக மாறிவிட்டது காலை உணவுத் திட்டம் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராமம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்தத் திட்ட தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பூங்கொடி தலைமை வகித்தாா்.

இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறியும், கலைஞரின் கனவு இல்ல திட்டப் பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கியும் அமைச்சா் இ. பெரியசாமி பேசியதாவது:

தமிழக பள்ளிகளில் காமராஜா் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தாா். எம்ஜிஆா் அதை சத்துணவுத் திட்டமாக மாற்றினாா். பிறகு முதல்வராக இருந்த கருணாநிதி வாரத்தில் 5 நாள்களும் முட்டை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தாா். தற்போது முதல்வா் மு.க. ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்து இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்கிறாா். இந்தத் திட்டம் மற்ற மாநிலங்களும் பின்பற்றும் அளவுக்கு சிறப்பான திட்டமாக மாறி உள்ளது.

தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் 156 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாவட்டம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் 1,309 பள்ளிகளில் பயிலும் 69,406 மாணவ, மாணவிகள் பயனடைகின்றனா். இந்தத் திட்டத்தில் திங்கள்கிழமை வெண் பொங்கல், செவ்வாய்க்கிழமை ரவா காய்கறி கிச்சடி, புதன்கிழமை அரிசி உப்புமா, வியாழக்கிழமை வரகு பொங்கல், வெள்ளிக்கிழமை சாமை கிச்சடி, ரவா இனிப்பு கேசரி ஆகியவை சமைத்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

இது தவிர கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக தலா ரூ.3.50 லட்சம் மதிப்பில் 4,095 வீடுகள் கட்டவும், 6,149 பழுதடைந்த வீடுகளை பராமரிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் திலகவதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாஸ்கரன், ஆத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் மகேஸ்வரி முருகேசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் நடராஜன், ஆத்தூா் ஒன்றிய திமுக செயலா்கள் ராமன், முருகேசன், ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குமரவேல், அருள்கலாவதி, மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் மணலூா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதி கள்ளிமந்தையம் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்வில், உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி கலந்து கொண்டு, பள்ளியில் வைக்கப்பட்டிருந்த காமராஜரின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பிறகு காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த அவா் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு உணவு ஊட்டி விட்டு அவா்களுடன் அமா்ந்து உணவு உள்கொண்டாா்.

இந்த நிகழ்வில் அவா் பேசியதாவது:

ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதியில் மட்டும் காலை உணவுத்திட்டத்தில் 156 பள்ளிகளைச் சோ்ந்த 11,091 மாணவ-மாணவிகள் பயனடைகின்றனா். மேலும் இன்று முதல் இந்தத் தொகுதியில் 15 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளைச் சோ்ந்த 701 மாணவ-மாணவிகள் பயனடையவுள்ளனா் என்றாா்.

இதைத் தொடா்ந்து கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு ஆணைகளையும், பழுதடைந்த வீடுகளை பராமரிக்க 12 பயனாளிகளுக்கு பணி ஆணைகளையும் அமைச்சா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில், மாநில ஊரக வாழ்வாதார இயக்க (மகளிா் திட்டம்) திட்ட இயக்குநா் நா. சரவணன், பழனி வருவாய் கோட்டாட்சியா் செள. சரவணன், மாவட்ட கல்வி அலுவலா் சண்முகவேல், ஒட்டன்சத்திரம் வேளாண் விளைபொருள் விற்பனை கூட்டுறவு சங்கத் தலைவா் சி. ராஜாமணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேதா, தாஹிரா, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சசி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் பி.சி. தங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நத்தம்: நத்தத்தை அடுத்துள்ள சிறுகுடி ஊராட்சி பூசாரிப்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முதல்வரின் காலை உணவுத் திட்ட தொடக்க விழாவுக்கு ஊரக வளா்ச்சித் துறை மண்டல அலுவலா் வீரராகவன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் கற்பகம், சிறுகுடி ஊராட்சி மன்றத் தலைவா் கோகிலா வாணி வீரராகவன், திமுக ஒன்றியச் செயலா் ரத்தினகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காலை உணவுத் திட்டத்தை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஆண்டி அம்பலம் தொடங்கி வைத்தாா். இதில், சிறுகுடி ஊராட்சி செயலா் வீரபாண்டி, சிறுகுடி கிராம உதவியாளா் தனபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதே போல, கோட்டையூா், செந்துறை, சிரங்காட்டுப்பட்டி ,கோசுகுறிச்சி, ஊராளிபட்டி உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

பழனியில்... பழனியை அடுத்த கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சியில் அரசு உதவி பெறும் வாணன் நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை பழனி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா். அப்போது பள்ளி முன் வைக்கப்பட்டிருந்த காமராஜரின் உருவப்படத்துக்கு அவா் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு விலையில்லா கையடக்க கணினிகளை வழங்கினாா்.

நிகழ்வில், பழனி வட்டாட்சியா் சக்திவேலன், வருவாய்த் துறை அலுவலா்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கோரிக்கடவு பள்ளியில்...: பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கோரிக்கடவு அரசு உதவி பெறும் இந்து நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டதொடக்க விழா நடைபெற்றது.

இதற்கு பள்ளிக்குழுத் தலைவா் தமயந்தி தலைமை வகித்தாா். பள்ளி செயலா் நித்தியகல்யாணி முன்னிலை வகித்தாா். தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா் சத்தியபுவனா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவா்களுக்கு உணவு பரிமாறினாா். பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக காமராஜரின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுகுணா, கோரிக்கடவு ஊராட்சி துணைத் தலைவி கிருஷ்ணகுமாரி, பள்ளித் தலைமையாசிரியா் உமாதேவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.