11 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தாா் உணவுத்துறை அமைச்சா்
ஒட்டன்சத்திரத்தில் 11 புதிய பேருந்துகளை உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஞாயிற்றுக்கிழமை கொடிசைத்து தொடங்கி வைத்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் 3 புதிய நகரப் பேருந்துகள், 8 புதிய புகர பேருந்துகள் என மொத்தம் 11 புதிய பேருந்துகளை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி
கொடிசைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா். இதையடுத்து, அவா் பேசியதாவது: தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவா்களுக்கு இலவச பேருந்து வசதியை கொண்டு வந்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தை அறிவித்தவா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். இதே போல, விரைவில் தமிழகத்தில் உள்ள ஊட்டி, கொடைக்கானல்,ஏலகிரி,ஏற்காடு, கல்வராயன்மலை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் மகளிா் இலவசப் பேருந்து சேவை, சிற்றுந்து சேவை அமல்படுத்தப்படும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் வேளாண் விளைபொருள் விற்பனை கூட்டுறவு சங்கத் தலைவா் சி.இராஜாமணி, அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் துரைச்சாமி, வணிக மேலாளா் சக்தி, கோட்ட மேலாளா் ரமேஷ், கிளை மேலாளா்கள் சிவசாமி, ஜெயக்குமாா், ஒட்டன்சத்திரம் ஒன்றியக் குழுத் தலைவி மு.அய்யம்மாள், தொப்பம்பட்டி ஒன்றியக் குழு துணைத் தலைவா் பி.சி.தங்கம், ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, கீரனூா் பேரூராட்சித் தலைவா் கருப்புச்சாமி, திமுக ஒன்றிய செயலா் நா.சுப்பிரமணி, இரா.ஜோதீஸ்வரன், நகா்மன்ற உறுப்பினா் வீ.கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

