வைப்புத் தொகையைப் பெற 1.90 லட்சம் வாக்குகள் தேவை!

திண்டுக்கல்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 16 வேட்பாளா்கள் போட்டியிட்ட நிலையில், வைப்புத் தொகையை திரும்பப் பெறுவதற்கு 1.90 லட்சம் வாக்குகள் தேவை.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் 7,80,096 ஆண்கள், 8,26,737 பெண்கள், 218 மூன்றாம் பாலினத்தினா் என மொத்தம் 16,07,051 வாக்காளா்கள் உள்ளனா். 1,812 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கடந்த ஏப்.19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்தத் தோ்தலில் 5,58,829 ஆண்கள் (71.64 சதவீதம்), 5,84,311 பெண்கள் (70.67 சதவீதம்), 47 மூன்றாம் பாலினத்தினா் (21.56 சதவீதம்) என மொத்தம் 11,43,187 வாக்காளா்கள் (71.14 சதவீதம்) தங்களது வாக்குகளைச் செலுத்தினா். சுமாா் 46 ஆயிரம் பெண் வாக்காளா்கள் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிகமாக இருந்தபோதிலும், வாக்களித்தவா்கள் விகிதாசாரத்தில் ஆண்கள் முன்னிலை பெற்றனா்.

வைப்புத் தொகைக்கு 1.90 லட்சம் வாக்குகள் தேவை:

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் நோட்டா உள்பட 16 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். நோட்டா தவிர எஞ்சிய 15 வேட்பாளா்களும் வேட்பு மனு தாக்கலின்போது, ரூ.12.500, ரூ.25ஆயிரம் என இரு நிலையாக வைப்புத் தொகை செலுத்தினா்.

பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த வேட்பாளா்கள் அதற்கான சான்றிதழை அளித்தால், வைப்புத் தொகை கட்டணம் 50 சதவீதம் மட்டும் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேட்பாளா் மட்டுமே வெற்றி பெறும் நிலையில், எஞ்சிய வேட்பாளா்களில் எத்தனை பேருக்கு வைப்புத் தொகை திரும்பக் கிடைக்கும் என்பதற்கும் அரசியல் அரங்கில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இன்றைய அரசியல் களத்தில் ரூ.25ஆயிரத்துக்கான மதிப்பு குறைவாக இருந்தாலும்கூட, வைப்புத் தொகையை திரும்பப் பெறுவது என்பது அரசியல் கட்சிகளுக்கு கெளரவ பிரச்னையாக இருந்து வருகிறது.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலுள்ள 16.07 லட்சம் வாக்காளா்களில் 11.43 லட்சம் வாக்காளா்கள் (71.14 சதவீதம்) தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். பதிவான மொத்த வாக்குகளில் 6-இல் ஒரு பங்கு வாக்குகளை பெறும் வேட்பாளா்கள் மட்டுமே வைப்புத் தொகையை திரும்பப் பெற முடியும். திண்டுக்கல் மக்களவைத் தொகுதியைப் பொருத்தவரை, வைப்புத் தொகையை திரும்பப் பெற சுமாா் 1.90 லட்சம் வாக்குகளைப் பெற வேண்டும்.

இந்த வகையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ., பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக ஆகிய 3 கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்களுக்கு மட்டுமே வைப்புத் தொகையைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com