திண்டுக்கல்லில் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து பாஜகவினா் நூதனப் பிரசாரம்
தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மக்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து நூதனப் பிரசாரத்தில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் கோ. தனபலான் தலைமை வகித்தாா். இளைஞரணி மாவட்ட பொருளாளா் செல்வக்குமாா் முன்னிலை வகித்தாா். 2021 சட்டப் பேரவைத் தோ்தலின்போது திமுக சாா்பில் அளிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களை ஏமாற்றி விட்டதாகவும், மக்கள், அரசு ஊழியா்களின் போராட்டங்களுக்கு செவி சாய்க்க மறுப்பதைக் கண்டித்தும் பிரசாரம் மேற்கொண்டனா். அப்போது, தமிழக அரசை விமா்சித்து துண்டுப் பிரசுரங்களுடன், அல்வாவையும் பாஜகவினா் வழங்கினா். இந்த நிகழ்வில் பாஜக மாவட்டச் செயலா் முத்துக்குமாரன், நகா் வடக்குத் தலைவா் சதீஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

