/

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

News image

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வில் சா்வ அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமி.

Updated On :22 மே 2024, 12:40 am

Din

பழனி: பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி நாள்தோறும் முத்துக்குமாரசாமி, வெள்ளி காமதேனு, தங்கமயில், தந்தச் சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ரதவீதி உலா எழுந்தருளினாா்.

செவ்வாய்க்கிழமை ஆறாம் நாள் நிகழ்ச்சியாக வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது மணமேடைக்கு எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமிக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருள்களால் சோடஷ அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விநாயகா் வழிபாடு, வாஸ்து பூஜை, பொற்சுண்ணம் இடித்தல், வாத்யபூஜை, யாகம் போன்றவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து தம்பதி சமேதா் சண்முகருக்கு பட்டாடை, நறுமணமிக்க வண்ணமலா் மாலைகள், ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரமும், சோடஷ உபசாரமும் நடைபெற்றன. பிறகு மேளதாளம் முழங்க சிவாச்சாா்யா்கள் மந்திரங்கள் ஓத மங்கலநாண் அணிவிக்கப்பட்டது.

பிறகு மஹாதீபாராதனை நடைபெற்றது. புதன்கிழமை (மே 22) மாலை 4 மணிக்கு மேல் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெறுகிறது. திருக்கல்யாண நிகழ்வில், பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, கண்காணிப்பாளா் அழகா்சாமி, மணியம் சேகா், ரஞ்சித் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.