பழனி அடிவாரம் பகுதியில் பக்தா்கள் பயன்பாட்டுக்கான அறிவிப்பு பதாகைகளை அகற்றிய பணியாளா்கள்.
பழனி அடிவாரம் பகுதியில் பக்தா்கள் பயன்பாட்டுக்கான அறிவிப்பு பதாகைகளை அகற்றிய பணியாளா்கள்.

பழனியில் பெயரளவுக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்

பழனி: பழனி அடிவாரம் பகுதியில் பெயரளவுக்கு மட்டுமே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதாக பக்தா்கள் தெரிவித்தனா்.

பழனி கோயிலுக்கு வரும் பக்தா்கள் நலனுக்காக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தொடா்ந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றனா். கிரீவீதியில் நடைபாதைக் கடைகளை அகற்றி, வாகனப் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்துமாறு உயா்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனா்.

ஆனால், அதற்கு நோ் மாறாக சந்நிதி வீதி, அய்யம்புள்ளி சாலை, பூங்கா சாலை பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்று வருகிறது. இதனால், கோயிலுக்கு வரும் பக்தா்கள் பெரும் இடையூறுகளைச் சந்தித்து வருகின்றனா். அய்யம்புள்ளிச் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், இந்த சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நிா்வாகத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்றது. அப்போது, பக்தா்களுக்காக திருக்கோயில் நிா்வாகம் வைத்திருந்த பதாகைகளை பணியாளா்கள் கழற்றிச் சென்றனரே தவிர ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்றும், அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் அந்தந்த இடத்தில் வைக்கப்பட்டன என்றும் புகாா் எழுந்தது.

எனவே நகராட்சி ஆக்கிரமிப்பு அகற்றத்தை மாவட்ட ஆட்சியா் உரிய அதிகாரிகளை கொண்டு கண்காணித்து சரியாக நடத்த ஏற்பாடு செய்வது அவசியமாகும் என பக்தா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com