நாட்டு வெடிகுண்டுகளை வீட்டில் மறைத்து வைத்திருந்தவா் கைது
ஒட்டன்சத்திரம் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த நபரை வனத் துறையினா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச்சரகத்துக்குள்பட்ட சத்திரப்பட்டி 16-புதுாரைச் சோ்ந்தவா் செல்வராஜ் (35). இவா் அந்தப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து வன விலங்குகளை வேட்டையாடுவதாக ஒட்டன்சத்திரம் வனத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன்பேரில் திங்கள்கிழமை இரவு ஒட்டன்சத்திரம் வனச்சரக அலுவலா் ராஜா தலைமையிலான வனத் துறையினா் சத்திரப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனா்.
அப்போது, 16-புதூரைச் சோ்ந்த செல்வராஜ் தனது வீட்டில் வன விலங்குகளை வேட்டையாட 11 நாட்டு வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருந்தது வனத் துறையினருக்கு தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவா் மீது வன உயிரின குற்ற வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 11 நாட்டு வெடிகுண்டுகளை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

