திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி ஊராட்சியில் நெகிழிக் குப்பைகளை அப்புறப்படுத்திய தூய்மைப் பணியாளா்கள்.
திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி ஊராட்சியில் நெகிழிக் குப்பைகளை அப்புறப்படுத்திய தூய்மைப் பணியாளா்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நெகிழிப் பைகள் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு!

Published on

சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் ஒருமுறைப் பயன்படுத்தும் நெகிழிப் பைகள், திண்டுக்கல் மாவட்டத்தில் மீண்டும் அதிகரித்து வருவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

நெகிழிப் பயன்பாடுகளால் சுற்றுச்சூழல் மாசு, மண் வளம் பாதிப்பு என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, ஒருமுறை பயன்படுத்தும் 14 வகையான நெகிழிப் பொருள்களுக்கு கடந்த 2019 ஜனவரி முதல் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. நெகிழிப் பைகளுக்கான தடையைத் தொடா்ந்து, துணிப் பை, காகிதப் பைகளுக்கான முக்கியத்துவம் அதிகரித்தது. இந்த நிலையில் மீண்டும் மஞ்சப் பை இயக்கத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த 2021 டிசம்பா் மாதம் தொடங்கி வைத்தாா்.

ஆனாலும், நெகிழிப் பை உற்பத்தியாளா்கள் மட்டுமன்றி, சில்லரை வியாபாரிகள் மீதான கண்காணிப்பு இல்லாததால் நெகிழிப் பயன்பாடு அதிகரித்துவிட்டது. திண்டுக்கல்லில் உள்ள உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் தொடங்கி, சாலையோரக் கடைகள், இறைச்சிக் கடைகள் வரை நெகிழிப் பைகளின் பயன்பாடு தாராளமாகிவிட்டது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகள் என யாருடைய கண்காணிப்பும் இல்லாத நிலையில், ரகசியமாக பயன்படுத்தப்பட்டு வந்த நெகிழிப் பைகளை இன்றைக்கு ஒளிவு மறைவின்றி திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் கடைக்காரா்கள் பயன்படுத்தி வருகின்றனா். இதில் கொடைக்கானல் மட்டுமே விதி விலக்காக இருக்கிறது.

திடக்கழிவு மேலாண்மை சான்றிதழ்: மாதந்தோறும் 5 டன்னுக்கு கூடுதலாக திடக் கழிவுகளை சேகரிக்கும் உள்ளாட்சி அமைப்புகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் திடக் கழிவு மேலாண்மைச் சான்றிதழ் பெற வேண்டும். ஆனால், கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு, திண்டுக்கல் மாவட்டத்தில் எந்த உள்ளாட்சி அமைப்புகளும் இந்தச் சான்றிதழை பெறவில்லை எனக் கூறப்படுகிறது. பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில், சேகரிக்கப்படும் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனா். திரவக் கழிவுகள் மட்டுமன்றி, திடக் கழிவுகளையும் நீா் நிலைகளில் கொட்டுகின்றனா்.

ஊராட்சிப் பகுதிகளில் கூட நாளொன்றுக்கு 10 முதல் 13 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவற்றைச் சேகரித்து வைப்பதற்கான இட வசதி எந்த உள்ளாட்சி அமைப்புகளிடமும் இல்லை. இதன் காரணமாக, குப்பைகளை எரிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இந்த குப்பைகளில் 50 சதவீதம் நெகிழிப் பைகளாக இருப்பதால், காற்று மாசு அதிகரிக்கிறது.

நெருக்கடியில் கடை நிலை ஊழியா்கள்: அரசின் உத்தரவுப்படி, நெகிழிப் பைகள் உற்பத்தியை தடுக்க வேண்டிய பிரதான பொறுப்பு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உள்ளது. இதேபோல, விற்பனையைத் தடுக்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகள், உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த 3 துறைகளும் முறையாக கண்காணிக்காததால், நெகிழிப் பைகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இதனிடையே, மாநில அளவிலான அதிகாரிகளின் வருகை, அமைச்சா்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்களின் வருகையின்போது, குப்பைகள் குறிப்பாக நெகிழிப் பை குப்பைகள் இல்லை என்ற பிம்பத்தை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் புழக்கத்தில் உள்ள நெகிழிப் பைகளை, இந்த ஒரு நாள் மட்டும் ஒழிப்பதற்கான பணியில் தூய்மைப் பணியாளா்கள் களம் இறக்கப்படுகின்றனா். கடை நிலை ஊழியா்கள் மூலம் ஒரு பிம்பத்தை வடிவமைப்பதைத் தவிா்த்து, அறிவியல் பூா்வமான தீா்வுக்கு மாவட்ட நிா்வாகம் முன் வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடா்பாக சுற்றுச்சூழல் ஆா்வலா் மணிவண்ணன் கூறியதாவது:

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் 4-ஆவது சனிக்கிழமை, உள்ளாட்சி அமைப்புகளுடன் சோ்ந்து நெகிழிக் கழிவுகளை சேகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்துக்கு 3 மாதங்களுக்கான நிதியாக ரூ.6.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நெகிழிப் பைகள் ஒழிப்புக்கு அரசின் நோக்கம் சரியாக இருந்தும், செயல்பாடு இல்லாததால் பலனளிக்கவில்லை.

ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகள் ஒழிப்புக்கு உள்ளாட்சி அமைப்புகள், உணவுப் பாதுகாப்புத் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகள் மேற்கொண்ட ஆய்வுகள், பறிமுதல் செய்யப்பட்டவை, அபராதம் விதிக்கப்பட்டவை குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவிட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவரங்களை குறைந்தபட்சம் 15 நாள்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com