உதவித் தொகையை உயா்த்தக் கோரி போராட்டம்: 600 மாற்றுத் திறனாளிகள் கைது
உதவித் தொகையை உயா்த்தக் கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தைச் சோ்ந்த 600 போ் கைது செய்யப்பட்டனா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்குச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயந்தி தலைமை வகித்துப் பேசியதாவது: தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.1,500, ரூ.2,000 என இரு நிலைகளில் வழங்கப்படுகிறது.
ஆனால், ஆந்திரம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15ஆயிரம் வரை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதே போல தமிழகத்திலும் உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிலையில், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 350 பெண்கள் உள்பட 600-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.
உணவு வழங்கவில்லை: கைதான மாற்றுத் திறனாளிகள், அருகிலிருந்த தனியாா் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா். காலையில் கைது செய்யப்பட்ட அவா்களுக்குப் பிற்பகல் 3 மணி வரை உணவு வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக காவல் துறையினருடன் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, காவல் துறை சாா்பில் தக்காளி சாதம் வழங்கப்பட்டது. ஆனால், அது அனைவருக்கும் போதுமானதாக இல்லாததால் மாலை வேளையில் பரோட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், மாற்றுத்திறனாளிகள் பலா் அதிருப்தியடைந்தனா்.

