ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
வத்தலகுண்டு அருகே ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழந்த விவகாரத்தில், ஆட்டோ ஓட்டுநரை கைது செய்யக்கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டைச் சோ்ந்த பெண்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்குச் சென்று விட்டு வெள்ளிக்கிழமை மாலை வீடு திரும்பினா். அப்போது, வேகமாக வந்த ஆட்டோஅவா்கள் மீது மோதியது. இதில் பழைய வத்தலகுண்டைச் சோ்ந்த ரத்தினம் (55) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், இருவா் காயமடைந்தனா்.
இதுதொடா்பாக வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநரைத் தேடி வந்தனா். இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநரைக் கைது செய்யக்கோரி உயிரிழந்த ரத்தினத்தின் உறவினா்கள் வத்தலகுண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, பெரியகுளம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.
