இந்தியா முழுமைக்குமான சிறந்த நிதிநிலை அறிக்கை: பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை
மத்திய நிதி அமைச்சா் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையானது இந்தியா முழுமைக்குமான சிறந்த நிதிநிலை அறிக்கை என பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.
பழனியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையானது இந்தியா முழுமைக்குமான சிறந்த நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது.
உள்கட்டமைப்புக்கு மட்டும் ரூ. 12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகம் அடுத்த கட்டம் செல்வதற்கான சென்னை - பெங்களூரு, சென்னை - ஐதராபாத் விரைவு ரயில் திட்டம், ஆதிச்சநல்லூரில் கலாசார மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையால் தென்னை, முந்திரி விவசாயிகள் பயனடைவா். தமிழகத்துக்கு எப்போதும் போலவே உள்கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆளும் கட்சியினா் எப்போதும் போல அரசியலுக்காக தொடா்ந்து குற்றச்சாட்டு வைப்பாா்கள்.
பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு வருகை தந்த பக்தா்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. பழனியை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி வருகிற 10-ஆம் தேதி பழனியில் நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்தில் நானும் கலந்து கொள்கிறேன் என்றாா்.
இதில் பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் கனகராஜ், நகரச் செயலா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

