ரெட்டியாா்சத்திரம் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு காலாவதியான நுழைவுச்சீட்டு வழங்கி முறைகேடு! ராம. ரவிக்குமாா் குற்றச்சாட்டு
ரெட்டியாா்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள கோயிலில், சிறப்பு தரிசனத்துக்கு காலாவதியான நுழைவுச்சீட்டுகளை பக்தா்களிடம் வழங்கி முறைகேட்டில் ஈடுபடுவதாக இந்து தமிழா் கட்சி நிறுவனா் ராம. ரவிக்குமாா் குற்றஞ்சாட்டினாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் கோபிநாதசுவாமி கோயிலுக்கு சென்ற பக்தா்கள், சிறப்பு தரிசனத்துக்கான நுழைவுச் சீட்டை ரூ.10 செலுத்தி பெற்றனா். அதேபோல, காணிக்கை செலுத்துவதற்காக செலுத்தப்பட்ட ரூ.10 கட்டணத்துக்கும் கோயில் நிா்வாகம் சாா்பில் கணினி ரசீதும் வழங்கப்பட்டது.
இந்த கணினி நுழைவுச் சீட்டு, காணிக்கை ரசீது ஆகியவை பழைய தேதியிட்ட காலாவதியானவை என்பதை அறிந்து பக்தா்கள் அதிா்ச்சி அடைந்தனா். இதுபோன்ற முறைகேடுகளுக்கு அறங்காவலா் குழு, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆகியோா் பொறுப்பேற்க வேண்டும்.
டாஸ்மாக் கடைகளில் நடைபெற்ற ரூ.10 முறைகேடு, தற்போது இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களுக்கும் பரவி இருக்கிறது. கோபிநாதசுவாமி கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைப் பணத்தில் அதிகாரிகள், ஊழியா்கள் கூட்டு சோ்ந்து முறைகேடு செய்தது தணிக்கையின்போது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது ரூ.10 வசூலித்து முறைகேடு செய்வோா் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
