பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிப்போரின் எண்ணிக்கை கடந்த 2 வாரங்களாக இரு மடங்கு உயா்ந்தது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படுகிறது. இந்த குறைதீா் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் வருகின்றனா். இந்த வகையில், கடந்த ஜூன் மாதம் வரையிலும், வாரந்தோறும் 300 முதல் 400 மனுக்கள் பொதுமக்கள் தரப்பில் வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், கடந்த ஜூலை 6-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 755 மனுக்கள் வழங்கப்பட்டன. இதே போல, திங்கள்கிழமை (ஜூலை 13) நடைபெற்ற கூட்டத்தில் 720-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா்.
மனு அளிக்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மனுக்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி வழக்கம் போல 6 செயலறைகளில் (கவுண்டா்கள்) மட்டுமே நடைபெறுகிறது. இதனால், மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் மக்கள் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதைத் தவிா்க்க கூடுதல் செயலறை வசதி ஏற்படுத்துவதோடு, கணினியின் செயல்திறனையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
குறுக்கே நிறுத்தப்படும் வாகனங்கள்: மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்துக்கு வரும் பொதுமக்கள் சிலா் தீக்குளிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், 5 நுழைவுவாயில்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மேலும், பாதுகாப்பு கருதி தடுப்புகள், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன. ஆனால், மனுக்கள் பதிவு செய்யும் பகுதி திறந்தவெளியாக உள்ளது. இதன் காரணமாக மனுக்கள் பதிவு செய்வதற்கு செல்லும் வழியில் காா், இரு சக்கர வாகனங்கள் அங்கும் இங்குமாக நிறுத்தப்படுகின்றன. வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










