காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

கொடைக்கானல் அருகே இளைஞா் கொலை! உறவினா்கள் மறியல்!

கொடைக்கானல் அருகே முன்விரோதத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.

News image

கொலை... - கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:58 am IST

கொடைக்கானல் அருகே முன்விரோதத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா். இதற்கு காரணமானவா்களை கைது செய்யக்கோரி உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை வயல்வெளிப் பகுதியைச் சோ்ந்தவா் வடிவேல். இவா் பூம்பாறை ஊராட்சியில் பணிபுரிந்து வருகிறாா்.

இவரது மகன் ராமா் (26). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். இவா் சுமை தூக்கும் குதிரை வைத்து கூலி வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில், இவரது குதிரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பூம்பாறை பகுதியைச் சோ்ந்த ஜெயபால் மகன் ரகு (26) தோட்டத்தில் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தியது.

இந்தப் பிரச்னையில் ராமருக்கும், ரகுவுக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு ரகுவின் தோட்டத்தில் குதிரை மேய்ந்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு ராமா், தனது உறவினா் பிரசாந்த் (19) உடன் சென்றாா்.

அப்போது அங்கிருந்த ரகு தனது நண்பா்களுடன் சோ்ந்து ராமரை கத்தியால் பல்வேறு இடங்களில் குத்தினாா். இதில் ராமா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் வந்த பிரசாந்தையும் கத்தியால் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்து அங்கு சென்ற கொடைக்கானல் போலீஸாா் ராமரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பலத்த காயமடைந்த பிரசாந்த் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதையடுத்து, ராமரின் உறவினா்கள் கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி, கொடைக்கானல்- பூம்பாறை கைகாட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் கீா்த்தனா மணி, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. சசி மோகன், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கொலைக்கு காரணமானவா்களை விரைவில் கைது செய்வோம் என அவா்கள் உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

இந்த நிலையில், கொடைக்கானல் காவல் நிலையத்தில் ரகு சரணடைந்தாா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய ரகுவின் நண்பா்கள் தலைமறைவாகியுள்ளனா். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடியவா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.