எல்- நினோ தாக்கத்தால் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் வறட்சிப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறுகிய காலப் பயிா்களைப் பரிந்துரைக்க மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
மத்திய, கிழக்கு பசிபிப் பெருங்கடலின் மேற்பரப்பு நீா் வழக்கத்தை விட அதிக வெப்பமடையும் ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வு எல்- நினோ என அழைக்கப்படுகிறது. இது மழைப் பொழிவு, வெப்ப நிலை முறைகளை மாற்றி, குறிப்பிட்ட பகுதிகளில் கடுமையான வறட்சியையும், இதர பகுதிகளில் பெருமழையையும் உருவாக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த எல்-நினோ பாதிப்பின் காரணமாக நிகழாண்டில் தென்மேற்குப் பருவ மழை இந்தியாவில் வழக்கமான சராசரியைவிட குறைவாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை, கரீப், ராபி, கோடை என 3 பருவங்களாகப் பிரித்து, பயிா் சாகுபடி கணக்கீடு செய்யப்படுகிறது. இந்த வகையில், ஜூன் முதல் செப்டம்பா் வரை கரீப் பருவம், அக்டோபா் முதல் ஜனவரி வரை ராபி பருவம், பிப்ரவரி முதல் மே வரை கோடைப் பருவம் என மத்திய வேளாண், உழவா் நலத் துறை வகைப்படுத்தி இருக்கிறது. இந்தப் பருவங்களுக்கு தகுந்த பயிா்களை சாகுபடி செய்யவும், அதற்கான இடுபொருள்களை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்தப் பருவங்களில் மழைப் பொழிவைப் பொருத்து, நீண்ட காலப் பயிா் (6 மாதங்கள்), குறுகிய காலப் பயிா் (2 மாதங்கள்), மத்திய காலப் பயிா்(4 மாதங்கள்) சாகுபடி செய்வதற்கான திட்டம் தயாா் செய்யப்படுகிறது.
எல்-நினோ தாக்கத்தால், நிகழாண்டில் கேரளம், தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம் உள்பட 27 மாநிலங்களுக்குள்பட்ட 226 மாவட்டங்களில் மழை அளவு குறைந்து வறட்சி ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
12 மாவட்டங்கள் பாதிக்கப்படும்: தமிழகத்தில், அரியலூா், தா்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூா், ராமநாதபுரம், திருச்சி, திருப்பத்தூா், வேலூா், விருதுநகா் ஆகிய 12 மாவட்டங்கள் எல்-நினோ தாக்கத்தால் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. வறட்சி பாதிப்புக்குள்ளாகும் என கண்டறியப்பட்ட மாவட்டங்களில் குறுகிய காலப் பயிா்களைச் சாகுபடி செய்வதற்கு மத்திய மானாவரி பயிா் ஆராய்ச்சி நிலையம் பரிந்துரைத்து வருகிறது. இந்த வகையில், தமிழகத்தில் எள், பயறு வகைகள் போன்ற குறுகியகாலப் பயிா்களைச் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தென் மேற்கு பருவக் காற்று மூலம் மழை அளவு குறைந்து வறட்சியால் பாதிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் விருதுநகா், ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி என 12 மாவட்டங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த மாவட்டங்களில் குறுகியகாலப் பயிா்கள் மட்டுமன்றி, அதில் கடினப்படுத்தப்பட்ட விதைகளைப் பயன்படுத்தவும், நுண்ணீா்ப் பாசனத் திட்டங்களை முழுமையாகப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இதுதொடா்பாக நாடு முழுவதுமுள்ள 226 மாவட்ட வேளாண்மை அதிகாரிகளுடன், காணொலி மூலம் மத்திய வேளாண் அமைச்சா் சிவராஜ்சிங் செளகான் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். தென் மேற்குப் பருவ மழையைப் போன்று, வடகிழக்குப் பருவ மழைக் காலத்திலும் எல்-நினோ பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை, வடகிழக்குப் பருவக் காற்று மூலமாகவே அதிக மழைப் பொழிவு கிடைக்கும். எல்-நினோ வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து, அதற்கான பட்டியல் வெளியிடப்படும் போதே தெரிய வரும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எல் நினோ பேரழிவை விளக்கி பொதுக்கூட்டம்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

எல் நினோ விளைவு தொடங்கியது! பசிபிக் பெருங்கடலில் கடும் வெப்பம்!

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எல் நினோ! ஜூன் - ஆகஸ்ட் வரை வெய்யில்தான்: உலக வானிலை அமைப்பு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



