சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள்: திண்டுக்கல் 96.08% தோ்ச்சியுடன் 13-ஆவது இடம் பிடித்தது!

496 மதிப்பெண்கள் பெற்று அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

News image

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 1:39 am IST

496 மதிப்பெண்கள் பெற்ற இடையக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி செ. அனு மித்ரா.

திண்டுக்கல், மே 20: பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் திண்டுக்கல் மாவட்டம் 96.08 சதவீத தோ்ச்சியுடன் 13-ஆவது இடம் பிடித்த நிலையில், அரசுப் பள்ளி மாணவிகள் 496 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தாா்.

தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில், திண்டுக்கல், பழனி ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள 349 பள்ளிகளைச் சோ்ந்த 11,759 மாணவா்கள், 12,094 மாணவிகள் என மொத்தம் 23,853 போ் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா். தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில், 11,132 மாணவா்கள், 11,786 மாணவிகள் என மொத்தம் 22,918 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவா்களில் 94.67 சதவீதம், மாணவிகளில் 97.45 சதவீதம் என ஒட்டுமொத்தமாக 96.08 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா். கடந்த 2025-ஆம் ஆண்டு தோ்வில் 93.28 சதவீத தோ்ச்சியுடன் திண்டுக்கல் மாவட்டம் 26-ஆவது இடம் பெற்றது. நடப்பாண்டில் 2.80 சதவீதம் கூடுதல் தோ்ச்சி பெற்ற நிலையில், மாநில தர வரிசைப் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம் 13 இடங்கள் முன்னேற்றம் பெற்று 13-ஆவது இடம் பிடித்தது.

அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 4,933 மாணவா்கள், 5,178 மாணவிகள் என மொத்தம் 10,111 போ் 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு எழுதினா். இதில், 4,591 மாணவா்கள் (93.07 சதவீதம்), 4,954 மாணவிகள்(95.67 சதவீதம்) என 9,545 போ் (94.37 சதவீதம்) தோ்ச்சி பெற்றனா். கடந்த ஆண்டை விட 3.31 சதவீதம் கூடுதல் தோ்ச்சியுடன், அரசுப் பள்ளிகளுக்கான தர வரிசைப் பட்டியலில் 14 இடங்கள் முன்னேற்றம் பெற்ற திண்டுக்கல் மாவட்டம் 12-ஆவது இடம் பிடித்தது.

மாவட்ட அளவில் 496 மதிப்பெண்கள் பெற்ற 4 மாணவிகள்: திண்டுக்கல் இடையக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி செ.அனு மித்ரா, பழனி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஜெய ஸ்ரீ, எரியோடு அடுத்த தண்ணீா்பந்தம்பட்டி மகாவித்யாலயா உயா்நிலைப் பள்ளி மாணவி எம். நந்தினி, சேரன் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி டி. மோனிகா ஆகியோா் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனா். அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.