பழனி நில முறைகேடு வழக்கு: பெண் அலுவலா் உள்பட இருவா் மீண்டும் சிறையில் அடைப்பு
பழனி நில முறைகேடு வழக்கில் பெண் அலுவலா் உள்பட இருவா் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.
பழனி கோயில் - கோப்புப் படம்
பழனி நில முறைகேடு வழக்கில் பெண் அலுவலா் உள்பட இருவா் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தண்டபாணி அறக்கட்டளைக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்தை மோசடியாகப் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் பேரில், திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்த முறைகேடு தொடா்பாக பழனி சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், அந்த அலுவலக இளநிலை உதவியாளா் சிவசங்கரி, ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் சிவக்குமாா் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், சிவசங்கரி, சிவக்குமாா் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிசிஐடி சாா்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த முதலாவது நீதித் துறை நடுவா் பாக்கியராஜ், சிவசங்கரி, சிவக்குமாா் ஆகியோரை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு அனுமதியளித்தாா்.
இதைத் தொடா்ந்து, சிவசங்கரி, சிவக்குமாா் ஆகியோரை கடந்த 13-ஆம் தேதி விசாரணைக்காக போலீஸாா் அழைத்துச் சென்றனா். விசாரணை முடிவடைந்து, திண்டுக்கல் நீதிமன்றத்தில் இருவரும் வெள்ளிக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனா். இதையடுத்து, இவா்கள் இருவரும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

