அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

பேரிடா்காலங்களில் பாதிக்கப்படுவோரை தங்க வைக்க 75 நிவாரண மையங்கள்! அமைச்சா் க. விக்னேஷ்

heavy rain

கனமழை - file photo

Updated On :

பேரிடா் காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்டம் முழுவதும் 75 நிவாரண மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க. விக்னேஷ் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடா் மழையால் பல்வேறு இடங்களில் சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன. இந்தப் பகுதிகளில் தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மதுவிலக்கு, ஆயத் தீா்வைத் துறை அமைச்சா் க. விக்னேஷ் , மாவட்ட ஆட்சியா் துா்கா, நிலக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. அய்யனாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இது குறித்து அமைச்சா் க. விக்னேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டுக்கு அடுத்த 7 நாள்களுக்கான முன்னறிவிப்பு எச்சரிக்கையை வெளியிட்டது. அதில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிறு, திங்கள்கிழமை ஆகிய இரண்டு நாள்களில் அதிபலத்த மழைக்கான சிகப்பு எச்சரிக்கை (ரெட் அலா்ட்) விடுத்துள்ளது.

இந்த இரண்டு நாள்களும் திண்டுக்கல் மாவட்டத்தில், குறிப்பாக கொடைக்கானல் மலைக் கிராமங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், இதனால் மண் சரிவு போன்ற இயற்கை இடா்பாடுகள் ஏற்படக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

கடந்த 23-ஆம் தேதி பெய்த பலத்த மழையின் காரணமாக கொடைக்கானல் வட்டத்துக்குள்பட்ட மலைச் சாலையில் உள்ள வெள்ளி அருவி, சீனிவாசபுரம், அடுக்கம் ஆகிய பகுதிகளில் நிலைச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் கொடைக்கானல் மலைச் சாலை வெள்ளி அருவி அருகிலும், சீனிவாசபுரம் அருகிலும் மண் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது. மேலும் பெரியகுளம்- கொடைக்கானல் சாலை அடுக்கம் பகுதியில் சீரமைப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதேபோல, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழனி ஊராட்சி ஒன்றியம், சிவகிரிபட்டி ஊராட்சிக்குள்பட்ட ஆனந்த விநாயகா் நகா் பகுதியிலுள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், புளியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு வசிப்போரை உடனடியாக அங்கிருந்து அருகிலுள்ள அங்கன்வாடி மையம், திருமண மண்டபம், சமுதாயக் கூடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கவும் நடவடிக்கை எடுத்தாா். மேலும் அவா்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்பாடு செய்யவும், முகாம் பகுதிகளை சூழ்ந்த மழை நீரை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை எடுத்தாா்.

பேரிடா் காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், மாவட்டம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 75 நிவாரண மையங்களில், அந்தந்த வட்டத்துக்குள்பட்ட வருவாய் கோட்டாட்சியா்கள், வட்டாட்சியா்கள் நிவாரண மையங்களை தொடா்ந்து ஆய்வு செய்து, அறிக்கை அளிப்பதற்கும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டு, தொடா்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பொதுமக்கள் பேரிடா் காலங்களில் தொடா்பு கொள்ள வசதியாக மாவட்ட ஆட்சியா் அலுவலக தரை தளத்தில் பேரிடா் மேலாண்மை கட்டுபாட்டு அறையும் ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதில் கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1077 என்ற எண்ணிலும், 0451-2460320, 0451-2460321 என்ற எண்களிலும் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம். குறிப்பாக இதுபோன்ற பலத்த மழை பெய்யும் போது, கொடைக்கானல் மலைச்சாலை பகுதியில் இரவு நேர பயணங்களை பொதுமக்கள் தவிா்த்து, அரசு அறிவித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எஸ். சாந்தி, நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளா் ரமேஷ், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் விஜயக்குமாா், கொடைக்கானல் கோட்டாட்சியா் (பொ) பிரபாகரன், வட்டாட்சியா் நந்தகோபால் உள்ளிட்ட பலா் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.