மதுரை, அக். 6: தமிழகத்தில் உள்ள பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் சிறப்புப் புத்தாக்கப் பயிற்சி அளித்து சான்று வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம் சார்பில் சித்த மருத்துவர் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டில் படிப்பறிவில்லாதவர்கள் கூட மூலிகைகள் மூலம் பாரம்பரிய அடிப்படையில் சித்த மருத்துவம் செய்து வருகின்றனர்.
நவீன மருத்துவம் வளர்ந்துவிட்ட நிலையில் கூட சித்த மருத்துவத்தை நாடுவோர் கணிசமாகவே உள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு முன் மத்திய மருத்துவ ஆய்வுக் குழு பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் பதிவுச் சான்று வழங்கி வந்தது.
ஆனால், சில நடைமுறைச் சிக்கல் காரணமாக 1990 முதல் சித்த மருத்துவப் பதிவு முறை நிறுத்தப்பட்டது. இதனால் பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
மாறாக, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் சித்த மருத்துவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே சித்த மருத்துவர்களாக அங்கீகரிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசுப் பட்டம் பெறாதவர்கள் போலி டாக்டர்கள் எனக் கூறப்பட்டு, அவ்வப்போது காவல் துறையினரின் நடவடிக்கைக்கும் உள்ளாகின்றனர்.
இந் நிலையில், சித்த மருத்துவத்தில் எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்து கண்டறியப்பட்டதாகவும், அதை ஆய்வுக்கு உள்படுத்தி அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் சித்த மருத்துவர்கள் சங்கத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையே, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் தலைமையில் கடந்த மாதம் சென்னையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் சிறப்பு புத்தாக்கப் பயிற்சி அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப் பயிற்சி குறித்த கருத்துரு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பயிற்சிக்கு பாரம்பரிய சித்த மருத்துவத்தில் ஈடுபட்டு வருவோரில் குறைந்தது 10 ஆம் வகுப்பு படித்தோர் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. குறைந்தது 15 நாள்கள் முதல் 30 நாள்கள் வரை பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி முடிந்தோர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல் அடிப்படையில் சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தேர்வு, நேர்காணலில் தேர்ச்சி பெற்று சான்று பெற்றவர்கள் மட்டுமே பாரம்பரிய சித்த மருத்துவர்களாக அங்கீகரிக்கப்பட்டு, சான்றும் வழங்கப்படும். சான்று பெறாதவர்கள் சித்த மருத்துவத்தை பாரம்பரிய முறையில் கூட மேற்கொள்ளக் கூடாது எனத் தடை விதிக்கப்படவும் உள்ளது.
தற்போது பாரம்பரிய சித்த மருத்துவத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சிறப்பு பயிற்சி முறைக்கு இதில் பாதிப் பேர்தான் தேர்வு பெறுவர் எனக் கூறப்படுகிறது.
பயிற்சிக்கு செல்வோர் அனைவரும் 35 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள். பயிற்சி சான்று என்பது எங்களுக்கு அரசிடம் கிடைத்துள்ள அங்கீகாரம் என்கிறார் மதுரை சித்த வைத்திய சங்கத் தலைவர் வி. காளிதாஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.