தாமதமாகும் ரயில்நிலைய பிரீபெய்டு ஆட்டோ திட்டம்

ஆட்டோக்களில் மீட்டர்கள் பொருத்தப்படாததால் மதுரை ரயில்நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ திட்டத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
Updated on
2 min read

ஆட்டோக்களில் மீட்டர்கள் பொருத்தப்படாததால் மதுரை ரயில்நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ திட்டத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

மதுரை ரயில்நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் கணிசமான அளவுக்கு சுற்றுலா பயணிகள் உள்ளனர். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் மீனாட்சி அம்மன் கோயில் பகுதிக்கு செல்வதற்கு பயணிகள் ஆட்டோக்களில் குறைந்தது ரூ.50 செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. பேரம் பேசுவதை பொறுத்து இந்த தொகையில் சிறிது மாறுதல் இருக்கலாம். இதுவே நகரின் மற்ற பகுதிகளாக இருந்தால், சாதாரண பயணிகள் ஆட்டோக்களில் பயணிக்க முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது.

இந்த நிலையை மாற்றுவதற்கு மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் பிரீபெய்டு ஆட்டோ திட்டத்தை செயல்படுத்த, கடந்த சில மாதங்களுக்கு முன் திட்டமிட்டது. இது தொடர்பாக ஆட்டோ சங்க நிர்வாகிகள் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுடன் ரயில்வே வர்த்தகப்பிரிவு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன்படி ரயில்நிலையத்தில் இருந்து நகரின் முக்கிய பகுதிகளுக்கு செல்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அட்டவணை ஏற்படுத்தப்படும்.

ரயில்நிலையத்தின் முன்பகுதியில் இடம்பெறும் கவுன்ட்டரில் பயணிகள் தாங்கள் செல்லுமிடத்தை தெரிவித்து அதற்கான பணத்தை செலுத்தினால், குறிப்பிட்ட கட்டணத்தில் ஆட்டோவில் பயணம் செய்து பயணிகள் தங்கள் இருப்பிடம் சென்று சேரலாம்.

ஆனால், இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் மீட்டர்கள் இல்லாதது ஒரு முக்கிய குறைபாடாக இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சென்னை, கோல்கத்தாவில் பிரீபெய்டு ஆட்டோ வெற்றிகரமாக செயல்படுகின்றன. மதுரையிலும் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆட்டோக்களில் மீட்டர்கள் இருந்தால் மட்டுமே, இதை செயல்படுத்தமுடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த திட்டம் குறித்து மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் சி.கல்யாணகுமார் கூறுகையில், பிரீபெய்டு ஆட்டோ திட்டம் பயணிகளுக்கு பாதுகாப்பானது. குறிப்பிட்ட ஆட்டோவில் பயணிப்பது பதிவு செய்யப்படுவதால் ஆட்டோவில் உடமைகளை தவறவிட்டாலும், அதை மீட்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், மதுரையில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவது தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிடவேண்டியது அவசியம் என்றார்.

இந்த திட்டம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பயன் உள்ள திட்டம் என்பதை ஆட்டோ ஓட்டுநர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இதுகுறித்து மதுரை

ரயில்நிலைய எச்எம்எஸ் ஆட்டோ சங்கத் தலைவர் ஓ.ஜெயபால் கூறியது:

மதுரை ரயில்நிலையத்தில் 1991-இல் இருந்து 1994- வரையில் பிரீபெய்டு ஆட்டோ திட்டம் இருந்தது. தற்போது இந்தத் திட்டம் மீண்டும் வருவதை வரவேற்கிறோம். ஆனால் கவுன்ட்டர் அறை வாடகை, மின்கட்டணம், ஊழியர் சம்பளம் போன்றவற்றுக்கு எங்கள் வருவாயில் இருந்து செலவு செய்ய வேண்டும் என ரயில்வே நிர்வாகம் சொல்கிறது. மூன்று ஷிப்டுக்கு 3 ஊழியர்கள் பணியாற்றுவர் என வைத்துக்கொண்டால் ஒரு நாளைக்கு ரூ.1000 வரை ஊதியம் வழங்க வேண்டியிருக்கும். இந்த செலவை எங்களால் ஈடுகட்டஇயலாது என்றார்.

அதே சமயம் வட்டார போக்குவரத்து அலுவலர் இதுகுறித்து கூறும் போது, பயணிகளிடம் சேவை கட்டணமாக தலா ரூ.2 வசூலித்தால் இந்த செலவை சரிக்கட்டமுடியும். மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இருந்து குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களை நியமிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

ஊழியர்கள் ஊதியம் போன்ற செலவுகளை ஈடுகட்ட அரசு உதவி செய்தால் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தலாம் என எச்எம்எஸ் ஆட்டோ சங்க மாவட்ட செயலர் எம்.துரைப்பாண்டி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com