ஒருவழிப் பாதையாகவுள்ள மதுரை மாசி வீதிகள்
By மதுரை | Published On : 30th June 2013 03:26 AM | Last Updated : 30th June 2013 03:26 AM | அ+அ அ- |

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மதுரை மாசி வீதிகளை ஒருவழிப் பாதைகளாக்கிட ஜூலை முதல் இரண்டு நாள்கள் சோதனை அடிப்படையில் வாகனங்கள் மாற்றிவிடப்பட உள்ளன.
இது தொடர்பாக, மாநகர் காவல் ஆணையர் அலுவலகச் செய்திக் குறிப்பு விவரம்: நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க காவல்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், நகரின் முக்கிய மாசி வீதிகளில் அதிகமான சரக்கு வாகனங்களும், வியாபாரிகளும் வந்து செல்வதால், அடிக்கடி போக்குவரத்தில் தேக்க நிலை ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைத் தவிர்க்கவும் வரும் ஜூலை 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் மட்டும் சோதனை அடிப்படையில் மாசி வீதிகளில் ஒருவழிப்பாதை செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, மாசி வீதிகளில் வரும் அனைத்து வாகனங்களும் கிளாக்வைஸ் (ஸ்ரீப்ர்ஸ்ரீந்ஜ்ண்ள்ங்) எனும் கடிகாரச் சுற்று முறையில் (இடமிருந்து வலமாக) இயக்க அனுமதிக்கப்படும்.
அதாவது, நகரின் வெளி வீதிகளில் இருந்து மாசி வீதிக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் நுழைகிற இடத்தில் இருந்து இடதுபுறம் மட்டுமே திரும்பிடவேண்டும். வலது புறம் திரும்பி மாசி வீதிகளில் வாகனங்களை செலுத்தக் கூடாது.
நான்கு மாசி வீதிகளில் இருந்து வெளி வீதிகளுக்கோ மற்றும் ஆவணி மூல வீதிகளுக்கோ வாகனங்கள் செல்ல ஒரு சில வீதிகள் தவிர மற்றவற்றில் தற்போதைய நடைமுறையே பின்பற்றப்படவேண்டும்.
வடக்குவெளி வீதியில் உள்ள பழைய டிவிஎஸ் சந்திப்பிலிருந்து, மேலமாசி வீதிக்குச் செல்லும் வாகனங்கள் மத்தியக் கூட்டுறவு வங்கி (சேதுபதி பள்ளி பஸ் நிறுத்தம்) வழியாக வந்து, மேல மாரட் வீதியில் காலேஜ் ஹவுஸ் அருகே இடதுபுறம் திரும்பி டவுன் ஹால் ரோடு வழியாகவோ அல்லது நேராக பெரியார் பஸ் நிலையம் அருகே கட்டபொம்மன் சிலை சந்திப்பு வந்து நேதாஜி சாலை வழியாக ஆரியபவன் சந்திப்பு சென்று இடதுபுறமாகத் திரும்பிச் செல்லலாம்.
டி.பி.கே.சாலை (திருப்பரங்குன்றம் சாலை), ஹயத்கான் சாலை (கூடலழகர் பெருமாள் கோயில் அருகே) சந்திப்பிலிருந்து தெற்குமாசி வீதி சந்திப்புக்குச் செல்லும் வாகனங்கள், கிரைம் பிராஞ்ச் வழியாக தெற்குமாரட் வீதி, மகால் சாலை, விளக்குத்தூண் காமராஜர் சாலை வழியாக தெற்குமாசி வீதிக்குச் செல்லவேண்டும்.
புதிய போக்குவரத்து மாற்றத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து மாசி வீதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவிடவேண்டும் என, அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.