கண்டதேவி கோயில் திருவிழா நடந்தால் சட்டம், ஒழுங்கு பாதிக்கும்

கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் திருவிழா நடத்தினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் அபாயம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பதிலளித்தார்.

கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் திருவிழா நடத்தினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் அபாயம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பதிலளித்தார்.

சிவகங்கை மாவட்டம், கண்டதேவியில் உள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் திருவிழாவை நடத்த உத்தரவிடக் கோரி சொர்ணலிங்கம் என்பவர் தாக்கல்செய்த மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்படுகிறது. திங்கள்கிழமை இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டபடி, திருக்கோயில் இணை ஆணையர் முத்து தியாகராஜன் ஆஜரானார். நீதிமன்றத்தில் அவர் கூறுகையில், ஒருமித்த கருத்து இல்லாததால், திருவிழா நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. திருவிழா நடத்தினால் சட்டம், ஒழுங்கு பாதிக்கக் கூடும் எனத் தெரிவித்தார்.

மேலும், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம் சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், கோயிலில் தேர் சீரமைப்பு பணி முடித்த பிறகு திருவிழா நடத்தலாம் என உஞ்சனை, செம்பொன்மாரி, தென்னிலை, இரவுசேரி ஆகிய 4 நாட்டார்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனால் புதிய தேர் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. தேரில் மரச் சக்கரங்களுக்குப் பதில் பதில் இரும்பு சக்கரம் மற்றும் இரும்புச் சட்டங்கள் பொருத்தப்பட உள்ளன. மரச் சிற்ப வேலைபாடுகள் அங்கீகரிக்கப்பட்ட ஸ்தபதிகள் மூலம் நடைபெறும்.

இதுதொடர்பான ஒப்பந்தப் பணிகள் ரூ.26 லட்சத்துக்கு கன்னியாகுமரி கூட்டுறவு கைவினைப் பொருள் சங்கத்துக்கு வழங்கப்பட்டது. அச் சங்கம் பணிகளைத் தொடங்காததால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதிதாக ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தப் பணிகள் நடைபெற உள்ளன. தேரோட்டம் நடத்துவதற்கு முன் அதன் உறுதித் தன்மை குறித்து பொதுப்பணித் துறை ஒப்புதல் பெறப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் வழக்கில், தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு தென்னிலை நாட்டார்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் தேரோட்டம் இல்லாமல் திருவிழா நடத்த அனுமதிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தனர். இம் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த கோரிக்கைக்கு மற்ற 3 நாட்டார்களின் ஒப்புதலைப் பெற்று புதிய மனுவைத் தாக்கல் செய்த உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com