பழிக்குப் பழியாக நடந்த கொலை: இருவர் கைது

மதுரையில் பழிக்குப் பழியாக பெயிண்டரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Updated on
1 min read

மதுரையில் பழிக்குப் பழியாக பெயிண்டரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை வண்டியூர் சௌராஷ்டிரபுரத்தைச் சேர்ந்தவர் மேகநாதன்(52). இவர் அப்பகுதியில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அண்ணாநகர் போலீஸார், லோடு முருகன், வேல்முருகன், சோணை, காளி, முத்துவேல், அருண்பாண்டியன், பூபதி, மாற்றான்பதி, முத்துக்கிருஷ்ணன், எஸ்.ஆர்.குமார், காளீஸ்வரன், மூக்குத்தி ஆகிய 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, முத்துவேல் மற்றும் எஸ்.ஆர்.குமார் ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனர். அண்ணாநகர் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து தப்பிச் சென்றவர்களைத் தேடி வருகின்றனர்.

கொலை தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் கூறும்போது, மதுரை வண்டியூரில் செந்தில்பாண்டி, உதயா இருவருக்கும் கஞ்சா விற்பனை தொடர்பாக மோதல் இருந்து வந்தது. மோதல்களில் இரு தரப்பிலும் சிலர் கொலை செய்யப்பட்டனர். சில ஆண்டுகளுக்கு முன் செந்தில்பாண்டி தரப்பைச் சேர்ந்த மாயன் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்குப் பழியாக உதயாவை, செந்தில்பாண்டி தரப்பினர் கொலை செய்தனர்.

உதயா கொலைக்குப் பிறகு லோடு முருகன் அக்கும்பலுக்கு தலைமையேற்றுச் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் குற்ற வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்ட லோடு முருகன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி செந்தில்பாண்டி தொழிலில் வளர்ந்து வந்தார்.

லோடு முருகனை ஜாமீனில் வெளியே கொண்டு வர அவரது மருமகன் பாலமுருகன் முயற்சித்துள்ளார். லோடு முருகன் வெளியே வந்தால் தங்களது தொழிலுக்கு இடைஞ்சல் ஏற்படும் எனக் கருதிய செந்தில்பாண்டி தரப்பினர், 2015-இல் பாலமுருகனை கொலை செய்தனர். இந்த வழக்கு அண்ணாநகர் காவல்நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

இதைத்தொடர்ந்து வெளியே வந்த லோடு முருகன், தன்னுடயை மருமகன் பாலமுருகன் கொலைக்கு பழிக்குப்பழியாக செந்தில்பாண்டியை கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார். இதைத்தெரிந்து கொண்ட செந்தில்பாண்டி எப்போதுமே ஆள்களுடன் பாதுகாப்பாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து அவரது தாய் மாமன் மேகநாதனைக் கொலை செய்து லோடு முருகன் கும்பல் பழி தீர்த்துள்ளது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com