புத்தகம் பரிசளிக்கும் பக்குவம் பெறவேண்டும்: பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம்

சுப நிகழ்வுகளில் புத்தகத்தை பரிசளிக்கும் பக்குவத்தை பெறவேண்டும் என பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரம் கூறினார்.
Updated on
1 min read

சுப நிகழ்வுகளில் புத்தகத்தை பரிசளிக்கும் பக்குவத்தை பெறவேண்டும் என பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரம் கூறினார்.
 மதுரையில் பபாசி சார்பில் நடைபெறும் 11 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை அவர் பேசியது:
 தமிழகத்தில் அண்மைக் காலமாக இலக்கிய நிகழ்வுகளுக்கு முதியோர்களே அதிகம் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் இலக்கிய கூட்டத்திற்கு அதிகம் வருவதில்லை. ரசனை மிக்கவர்களால் மட்டுமே இலக்கியத்தை படிக்கவும், கேட்கவும் முடியும்.
 தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், நட்பு என அனைத்து வாழ்க்கைச் சூழலும் மாறிவிட்டது. இதனால் நமது பண்பாட்டிலும் நெருக்கடி உருவாகியுள்ளது.
 பொருள் சேர்க்கும் சூழலில் தமிழர்கள் வாழ்ந்து வருகிறோம். பொருள் சேர்த்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். ஆனால், சேவை செய்து புகழ் சேர்த்தாலே வாழ்க்கையை வெல்ல முடியும். வாழ்க்கையை வெல்பவர்களே காலங்கடந்தும் பேசப்படுவர்.
 தமிழகத்தில் நடைபெறும் திருமணம் போன்றவற்றிலும், நவராத்திரி போன்ற ஆன்மிக நிகழ்வுகளிலும் புத்தகத்தையே பரிசளிக்கும் நிலை வரவேண்டும். அதுபோன்ற நிலை வந்தால் தமிழகம் வளர்ச்சியடைவது உறுதியாகும்.
 மகாகவி பாரதி ஏழ்மையில் இருந்தபோதுதான் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என பாடினார். ஆகவே நாம் இன்பத்தை செல்வம் தேடித்தான் பெறவேண்டும் என்பதல்ல.  தற்போது மேற்கத்திய கலாசாரத்தையே இளந்தலைமுறையினர் பின்பற்றுகின்றனர். நமது நாகரீகம் பண்பாடு காக்கப்படவேண்டும் எனில் குழந்தைகளிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கவேண்டும் என்றார்.
 நிகழ்ச்சிக்கு அரியலூர் தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு செயலர் பேராசிரியர் க.ராமசாமி தலைமை வகித்துப் பேசியது:
  இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிக நூல்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால், ஆங்கில நூல்களுக்கே அதிக வரவேற்பு உள்ளது. காரணம், அவற்றில் பிழைகள் ஏதும் இருப்பதில்லை. அதைப்போலவே எதிர்காலத்தில் எழுத்துப்பிழை, கருத்துப்பிழை இல்லாத வகையில் தமிழ் நூல்கள் வெளியிடப்பட வேண்டும் என்றார்.
 பொற்கிழிக்கவிஞர் அரு.சோமசுந்தரம் புத்தக வாசிப்பு குறித்து சிறப்புரையாற்றினார். பபாசி செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.கெளரிசங்கர் வரவேற்றார். நிரந்தர புத்தகக்காட்சி உறுப்பினர் வி.ஆர்.கே.சிதம்பரம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com