மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டார இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்; அரசு பள்ளியிலேயே சேர்ப்போம் என முடிவு செய்துள்ளனர். அரசுப் பள்ளியின் மேம்பாட்டில் ஆர்வம் செலுத்தும் அவர்கள், பள்ளிக் கட்டடப் பணிக்கு தங்களது பங்களிப்பாக ரூ.7 லட்சத்தை வழங்கியுள்ளனர்.
 மேலூரைச் சுற்றியுள்ள கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை. விவசாயம் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், பிழைப்புத் தேடி இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். பள்ளிப் படிப்போடு இடைநிற்றல், தொழில் வாய்ப்பு இல்லாதது போன்ற காரணங்களால் இப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களில் 80 சதவீதம் பேர் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். அரபு நாடுகளிலும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் தொழிலாளர்களாகப் பணிபுரியும் அவர்கள் தங்களது குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
 வெள்ளலூர் அருகே மட்டங்கிபட்டி இளைஞர்களும், பொதுமக்களும் இணைந்து  அங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்குப் புதிய கட்டடத்தை கட்டியுள்ளனர். சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெற்ற ரூ. 8 லட்சம் மற்றும் உள்ளூர் இளைஞர் மற்றும் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட ரூ. 7 லட்சம் என ரூ. 15 லட்சத்தில் அந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது முதல் தளம் கட்டும் பணியிலும் இளைஞர்கள் இறங்கியுள்ளனர். இப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் உள்ளனர்.
 தனியார் பள்ளிகளைப்போல ஆங்கிலத்துக்கு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக மாதம் ரூ. 3 ஆயிரம் சம்பளத்தில் சிறப்பு ஆசிரியரையும் கிராமக் கல்விக் குழு மூலமாக நியமித்துள்ளனர்.
  இதுகுறித்து மட்டங்கிபட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் எம்.முருகன், வி.கருப்பணன் ஆகியோர் கூறியதாவது:
 எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் அரபு நாடுகளில் சாதாரண கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு அங்கு நல்ல ஊதியம் கிடைக்கும். ஆனால் பெரும்பாலானோர் படிப்பறிவு குறைவானவர்கள் என்பதால், உடல் உழைப்பாளிகளாக குறைந்த ஊதியத்தில் பணிபுரிகின்றனர்.
 அடுத்த தலைமுறையும் எங்களைப்போல கஷ்டப்படக் கூடாது. ஆகவே, எங்களது குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி சிறப்பாக இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். பள்ளி வயதுள்ள அனைத்துக் குழந்தைகளையும் உள்ளூரில் உள்ள அரசுப் பள்ளியின்தான் சேர்க்க வேண்டும், தனியார் பள்ளிகளுக்கு அனுப்பக் கூடாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப பள்ளிக்கு நல்ல கட்டட வசதி ஏற்படுத்தியுள்ளோம். அரசு நியமித்துள்ள ஆசிரியர்களோடு, கூடுதலாக ஒரு ஆசிரியரை நியமித்துள்ளோம். விரைவில் முதல் தளம் கட்டவும், குழந்தைகளுக்கு கூடுதல் கழிப்பறை கட்டடவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
 வெள்ளலூர் சுற்றுப்புற கிராமங்களில் ஏறத்தாழ 20 ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 5 ஆயிரம் குழந்தைகள் படிக்கின்றனர்.
மட்டங்கிபட்டியைப்போல அருகே உள்ள உறங்கான்பட்டி, அழகிச்சிபட்டி, கூலிப்பட்டி ஆகிய கிராமங்களில் பள்ளிகளை மேம்படுத்த இளைஞர்களும், பொதுமக்களும் தீவிரமாகச் செயலாற்றி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.