பராமரிப்பு இல்லாத பெண்கள்-சிறுவர் நூலகம்! பூச்சிகளுக்கு இரையாகும் புத்தகங்கள், வீணாகும் விளையாட்டுச் சாதனங்கள்

மதுரை மாவட்ட மைய நூலக வளாகத்தில் உள்ள பெண்கள்-சிறுவர் நூலகம் பராமரிப்பு இல்லாமல் நூல்கள் செல்லரித்துப் போகும்
Updated on
1 min read

மதுரை மாவட்ட மைய நூலக வளாகத்தில் உள்ள பெண்கள்-சிறுவர் நூலகம் பராமரிப்பு இல்லாமல் நூல்கள் செல்லரித்துப் போகும் அவலமும், சிறுவர்களுக்கான விளையாட்டுச் சாதனங்கள் வீணாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
 மதுரை பீபிகுளத்தில் 1961 இல் பெண்கள்}சிறுவர் நூலகம் தொடங்கப்பட்டது. பெண்கள் மற்றும் 5 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமியர் நூலகத்தில் உறுப்பினராகினர்.  நூல்களின் எண்ணிக்கை பெருகியதால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சிம்மக்கல்லில் உள்ள மாவட்ட மைய நூலகத்தின் முதல் தளத்துக்கு இந்த நூலகம் இடம் மாற்றப்பட்டது.
 தற்போது இந்த நூலகத்தில் சுமார் 65 ஆயிரம் நூல்கள் உள்ளன. நூலகத்தின் உறுப்பினர்களாக உள்ள 4,023 பேரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறுவர், சிறுமியர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தற்போது 600    பேர் மட்டுமே தொடர்பில் உள்ளனர். நூலகப் புரவலர்களாக ரூ.1000 செலுத்தி 25 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தினமும் காலை 9 முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படும் இந்த நூலகத்துக்கு தினமும் 50 பெண்கள் மற்றும் 20 சிறுவர், சிறுமியர் வந்து செல்கின்றனர்.
 தற்போது நூலகர், தாற்காலிக துப்புரவுப் பணியாளர் என இருவர் மட்டுமே உள்ளனர். அவர்களால் அங்கு வருவோருக்கு நூல்களை எடுத்துக் கொடுக்க மட்டுமே நேரம் உள்ளது. நூலகத்தில் உள்ள சுமார் 65 ஆயிரம் நூல்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் 50 ஆண்டுகள் பழமையானவை. எனவே, அவற்றை நீக்கிவிட்டு காலத்துக்கு ஏற்றார்போல் நூல்கள் இடம் பெற வேண்டியது அவசியம் என்கிறார்கள் வாசகர்கள்.
இங்கு கேரம் மற்றும் செஸ் விளையாட்டு பயிற்சி பெறவும் வசதி உள்ளது. ஆனால் இந்த விளையாட்டுகளை கற்றுத் தர பயிற்சியாளர் இல்லை.
மேலும் பராமரிக்க ஆள் இல்லாததால் பல விளையாட்டுப் பொருள்கள் சேதமடைந்துள்ளன.
இடமாற்றக் கோரிக்கை: மாவட்ட மைய நூலகத்திற்குள் இருப்பதால் இந்த நூலகம் இருப்பதே பெரும்பாலான பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு தெரியாமல் உள்ளது. ஆகவே நூலகத்தை தனிக் கட்டடத்துக்கு மாற்ற வேண்டும் என்பது வாசகர்களின் கருத்து.  
இந்த நூலகத்தின் உறுப்பினர்களும், வாசகர்களும் சிம்மக்கல் பகுதியிலேயே அதிகம் உள்ளதாலும், சாரதா பள்ளி, கஸ்தூரிபா காந்தி மாநகராட்சி பள்ளி ஆகியவற்றின் மாணவியரே அதிக உறுப்பினர்களாக உள்ளதாலும், வேறு பகுதிக்கு மாற்றினால் அவர்கள் இங்கு வர முடியாத நிலை ஏ ற்படும்.
எனவே மாவட்ட மைய நூலகத்தின் பின்புறம் பயன்பாட்டில் இல்லாத சமுதாயக் கூடத்தை சீரமைத்து அங்கு இந்த நூலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com