வேருக்கு நீர் வார்க்கும் மேகங்கள்: ம.திருமலை

மதுரை கோச்சடையில் வசிக்கும் பேராசிரியர்  ம.திருமலை ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டம் தும்முசின்னம்பட்டி எனும் குக்கிராமத்தில்

மதுரை கோச்சடையில் வசிக்கும் பேராசிரியர்  ம.திருமலை ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டம் தும்முசின்னம்பட்டி எனும் குக்கிராமத்தில் அரசுப் பள்ளியில் கல்வியைத் தொடங்கியவர்.  மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழ் முனைவர் பட்டம் பெற்று அங்கேயே 31 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.
   பல்கலைக்கழகத்தில் தமிழியற்புலத் தலைவர், கூடுதல் தேர்வாணையர், தேர்வாணையர்,  நூல் விமரிசன பதிப்புத்துறை இயக்குநர், விடுதிக்காப்பாளர், தனிச் சிறப்பு அலுவலர் என ஏராளமான பொறுப்புகளை வகித்துள்ளார்.  அவரது பணி அனுபவத்தால் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக மூன்றாண்டுகள் பணியிலிருந்தார்.
 உலகத் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த ம.திருமலை இதுவரை 289 நூல்களை எழுதியுள்ளார்.  நவீன இலக்கிய ஆராய்ச்சி விமரிசன நூல்களை எழுதியுள்ளார்.  
  தமிழ் இலக்கியங்களை வாழ்வியல் நோக்கில் அணுகும் இவரது விமர்சனம் அனைத்து இலக்கியவாதிகளாலும் ரசிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
   பேராசிரியர் ம.திருமலை சமீபத்தில்  நார்மன் வின்சென்ட் பீலேயின் உடன்பாட்டு சிந்தனையின் ஆற்றல் குறித்த ஆங்கில நூலைப் படித்துள்ளார். அது குறித்த அவரது விமர்சனம் இதோ:  மனிதர்களிடம் அனைத்து விதமான ஆற்றலும், தனித்திறனும் இயற்கையாகவே அமைந்துள்ளன. நல்ல ஆற்றலுடன் மனிதர்களுக்குள் அவர்களைத் தளர்ச்சியடையச்செய்யும் சிந்தனையும் உள்ளது.
    ஆகவே நம்மை சோர்வடையச் செய்யும் சிந்தனையை அடக்கி ஆளும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டியதன் அவசியத்தை  தனது நூலில் நார்மன் வின்சென்ட்பீலே மிகச் சிறப்பாக விவரித்திருக்கிறார். மனிதன் குறுகிய எண்ணத்தை விட்டு பரந்த மனப்பான்யை கைக்கொண்டால் வெற்றியை எளிதில் தொட்டுவிடலாம் என்பதே பீலேவின் கருத்தாகும். அதை அவர்,   இதயத்தை வேலியைத் தாண்டி தூக்கிப் போடு என்கிறார்.
  இதன் மூலம் நமக்கு நாமே விதித்த தடையை உடைத்து லட்சியத்தை வானில் பறக்கவிட வேண்டும் என உற்சாகப்படுத்துகிறார்.  
   பீலேவின் கருத்தானது திருவள்ளுவரின் கானமுயல் எய்த அம்பினில் என்ற திருக்குறளின் கருத்தையே பிரதிபலிப்பதாக உள்ளது.  வேட்டையின் போது முயலை நோக்கி அம்பை எய்து வீழ்த்தி வெற்றி பெறுவதை விட யானையை நோக்கி அம்பை எய்வது சிறந்தது என்பதாகும்.  மனித லட்சியத்தை மிக உயர்வான நிலைக்கு எடுத்துச்செல்லும் போதுதான் வெற்றியை காணமுடியும் என்கிறார் பீலே.
  தற்கால தமிழ் இலக்கியங்களில் குறிப்பாக நவீன இலக்கியங்களில் வாழ்க்கையின் நெருக்கடிகளை விளக்கும் வகையிலே உள்ளடக்கம் அமைந்துள்ளது.  இதுவரை தமிழ் நாவல், சிறுகதைகளில் இடம் பெறாத கருப்பொருள்களையே தற்போதைய எழுத்தாளர்கள் கையாளுவது பாராட்டுக்குரியது.  குறிப்பிட்ட இடத்தை பற்றி விமரிசனம், ஆய்வு நோக்கில் இலக்கியம் அமைகிறது.
 கதை கூறி பொழுதைக் கழிக்க வைக்கும் அம்சங்களாக மட்டுமின்றி சிந்திக்க வைத்து தகவல்களை அறியச்செய்யும் வகையிலே நவீன இலக்கியவாதிகள் படைப்புகளை அமைக்கின்றனர்.  எழுத்தாளர் பூமணியின் அஞ்ஞாடி,  சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் உள்ளிட்டவை புதிய கோணத்தில் வாழ்வியலை அலசுபவையாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com