திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் தண்ணீர் வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு நாள்தோறும் மதுரை மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு கார்த்திகை திருவிழா, கந்தசஷ்டி, பங்குனிப் பெருவிழா, வைகாசி விசாகம், தெப்பத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் பிரசித்தி பெற்றவை.
இத்திருவிழாவில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்களில் பலர் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக, முடி காணிக்கை அளிப்பது வழக்கம். இதற்காக, கோயில் சார்பில் சரவணப் பொய்கை அருகே தனியாக முடி காணிக்கை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, முடி காணிக்கை செலுத்த கோயில் நிர்வாகம் சார்பில் தனியாகக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
ஆனால், இங்கு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் குளிப்பதற்கு வசதிகள் செய்து தரப்படவில்லை. இதற்காக கட்டப்பட்ட கழிப்பறையும் பூட்டியே கிடக்கிறது. இதனால், முடி காணிக்கை செலுத்திய பக்தர்கள் தனியாரிடம் ரூ. 20 கொடுத்து தண்ணீர் வாங்கி வெட்ட வெளியில் குளிக்கும் நிலை உள்ளது. பெண் பக்தர்களுக்கும் இதே நிலைதான் உள்ளது.
அதேநேரம், ஏழை எளிய கிராம மக்கள் சரவணப் பொய்கையில் குளிக்கின்றனர். ஏற்கெனவே சரவணப் பொய்கை தண்ணீர் மிகவும் அசுத்தமாக உள்ள நிலையில், பக்தர்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
எனவே, கோயில் நிர்வாகம் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்ட குளியலறையை சீர்செய்து, தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
சாதாரண கிராமக் கோயில்களில் கூட பக்தர்கள் வேண்டிய வசதிகள் உள்ளன. ஆனால், முருகப் பெருமானின் முதற்படையான திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் வேண்டிய வசதிகள் இல்லாதது வருத்தமளிக்கிறது என, பக்தர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.