அமைச்சரின் அறிவிப்பு என்னாச்சு?

மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் (ரேஸ்கோர்ஸ்) உள்ள நீச்சல் குளத்தின் நீளம் 25 மீட்டரிலிருந்து 50 மீட்டராக அதிகரிக்கப்படும் என்ற
Updated on
2 min read



மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் (ரேஸ்கோர்ஸ்) உள்ள நீச்சல் குளத்தின் நீளம் 25 மீட்டரிலிருந்து 50 மீட்டராக அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி பல ஆண்டுகளாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் திறமை பெற்ற தேசிய நீச்சல் வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒரு ஏக்கர் பரப்பளவில் இந்த நீச்சல்குள வளாகம் அமைக்கப்பட்டது. இது, 25 மீட்டர் நீளம், 13 மீட்டர் அகலத்தில் நீச்சல்குளம், அதில் உள்ள தண்ணீரை சுத்திகரிக்க குளோரின் வாயு கலக்கச் செய்யும் சாதனங்கள், ஆடவர், மகளிருக்கான உடை மாற்றும் அறைகள், கழிப்பறைகள், உயிர்காக்கும் சாதனம் என அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டது.
நீச்சல் குளம் அமைக்கப்பட்ட போது மதுரையில் 7 நீச்சல் வீரர்களே இருந்தனர். ஆனால், தற்போது தினமும் காலை, மாலை என 60 பேர் வரை பயிற்சிக்கு வருகின்றனர். அவர்களில் 40 பேர் மாநில, தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்றவர்களில் இதுவரை 25 பேர் வரை தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளனர். தற்போது பள்ளி மாணவ, மாணவியர் 10 பேர் வரை தேசியப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைப் பெற்றுவருவதுடன், ஒருவர் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் நீச்சல் விளையாட்டில் ஆர்வமிக்க வீரர், வீராங்கனைகள் இருந்தும் அவர்களுக்கான வசதிகள் நீச்சல் குளத்தில் செய்து தரப்படவில்லை என்பதே உண்மை. தற்போதைய நீச்சல் குளத்தில் நிரந்தரப் பயிற்சியாளர் இல்லை. மேலும், மகளிருக்கான பயிற்சியாளரும் இல்லை. அதைவிட குளத்தில் நிரப்ப தேவையான 3 லட்சம் லிட்டர் நல்ல தண்ணீரையும் ரூ.24 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கிவருகின்றனர்.
நிரப்பும் தண்ணீரில் வாரத்தில் 24 ஆயிரம் லிட்டர் ஆவியாகும் என்றும், அதனடிப்படையில் சுழற்சி முறையில் அதை சுத்திகரித்து பயன்படுத்தும் வசதியும் உள்ளது. ஆனால், குளோரின் வாயுவை தண்ணீரில் செலுத்தி சுத்தப்படுத்தும் சாதனமானது கடந்த 2016 ஆம் ஆண்டு முதலே செயல்படவில்லை. இதனால், குளோரின் வாயுவை சாதனமின்றி நேரடியாகவே தண்ணீரில் செலுத்தி வருகின்றனர். இதனால் தண்ணீர் எந்த அளவுக்கு தூய்மைப்படுத்தப்படுகிறது என்பது கேள்விக்குறியாகும்.
தண்ணீரைச் சுத்தப்படுத்தும் குளோரின் வாயு உருளை 7 கிலோ எடையுடையது. அதை தூத்துக்குடி, தேனி, ஆண்டிபட்டி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தே வாங்க வேண்டியுள்ளது. ஒரு சிலிண்டர் விலை ரூ.3,500 என்ற நிலையில், அதை மதுரைக்கு கொண்டுவர ரூ.2500 செலவாகிறது. ஆகவே சிரமத்திற்கிடையே கொண்டு வரும் உருளை மூலம் தண்ணீர் முறையாக தூய்மைப்படுத்துவதற்கு தூய்மைச் சாதனத்தின் செயல்பாடு முக்கியமாகும் என்கிறார்கள், நீச்சல் குள பராமரிப்பு பணியாளர்கள்.
அமைச்சர் வாக்குறுதி என்னாச்சு?: மதுரையில் சர்வதேச நீச்சல் வீரர்கள் உருவான நிலையில், மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகளையே நடத்தும் நிலையில் நீச்சல்குளத்தின் நீளம் உள்ளது. ஆகவே குளத்தின் நீளத்தை 50 மீட்டராக அமைச்சர் முதல் விளையாட்டு ஆணைய அதிகாரிகள் வரை மனு கொடுக்கப்பட்டும் பயனில்லை. கடந்த ஆண்டு மைதானத்தில் நடந்த கூடைப்பந்தாட்டப் போட்டி பரிசளிப்பில் கலந்துகொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, நீச்சல் குளத்தின் நீளத்தை 50 மீட்டராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குளத்தின் நீளத்தை அதிகப்படுத்தினால் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தலாம். அதன்மூலம் மதுரையில் தேசிய நீச்சல் வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க பயிற்சி பெற்று சிறந்த நிலையை அடைவர்.
நீச்சல் குளத்தின் நீளத்தை அதிகப்படுத்தத் தேவையான இடமும் உள்ளது. அதில் தனியார் சிலர் கிரிக்கெட் பயிற்சி நடத்தி வசூலித்து வருகின்றனர். ஆகவே இனியாவது மதுரை நீச்சல் குளத்தின் நீளத்தை அதிகரித்து சர்வதேச அளவில் மதுரை நீச்சல் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கை.
மாநில அளவில் மதுரை 3 ஆவது இடம்
நீச்சல் போட்டிகளைப் பொருத்தவரை மாநில அளவில் சென்னை முதலிடத்தையும், திருநெல்வேலி இரண்டாமிடத்தையும் வகிக்கின்றன. மதுரை மூன்றாமிடத்தை வகிக்கிறது. சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தும் வகையில் 50 மீட்டர் நீச்சல் குளம் சென்னையில் மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது நெல்லையிலும் அதுபோன்ற நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுரையில் அதற்கான நடவடிக்கை கூட இன்னும் எடுக்கப்பட வில்லை என்றார் மதுரை மாவட்ட நீச்சல் கழக செயலர் கண்ணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com