தொலைநோக்கில்லாத் திட்டங்களால் மதுரையில் குடிநீர் பற்றாக்குறை தொடர்வதாகவும், நிகழாண்டில் வரும் ஏப்ரல் வரை மட்டுமே வைகை அணையில் தண்ணீர் உள்ளதால் புதிய குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2011 வரை 72 வார்டுகளாக இருந்த மதுரை மாநகராட்சி தற்போது 100 வார்டுகளாகியுள்ளது.
இந்நிலையில் வைகை அணையிலிருந்து மதுரைக்கு நேரடியாகக் குடிநீர் பெறும் முதலாவது வைகைக் கூட்டுக் குடிநீர் திட்டம் 1985ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் பண்ணைப்பட்டி, மேலக்கால், கோச்சடை, அரசரடி என முக்கிய இடங்களில் நீரை தேக்கி சுகாதாரமாக்கி 68 மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் விநியோகிக்கப்படுகிறது. இத்திட்டத்தால் வைகை ஆற்றின் தெற்குப் பகுதிகளில் உள்ள 50 வார்டுகளுக்கே குடிநீர் சீராக விநியோகிக்க முடிந்தது. இதனால் வைகை அணையிலிருந்து இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரண்டாவது வைகை கூட்டுக் குடிநீர் திட்டமானது கடந்த 2010 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. அதன்படி வைகை அணையிலிருந்து நேரடியாக 47 மில்லியன் லிட்டர் தண்ணீரை கொண்டு வந்து கோரிப்பாளையம், சொக்கிகுளம், புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்ட ஓரிரு ஆண்டுகளிலேயே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, தற்போது மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து வில்லாபுரம், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்காக கடந்த 2012 ஆம் ஆண்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயல்படுத்திய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து 11.8 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பெறும் நீராலும் மதுரையின் தேவை நிறைவாகவில்லை. இதனால், வைகை அணையிலிருந்து மூன்றாவது குடிநீர் திட்டம் ரூ.320 கோடியில் கருத்துரு தயாரிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நேரடியாகவே மதுரைக்கு குடிநீர் பெறும் புதிய திட்டம் சுமார் ரூ.1,145 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இதுவரை இரு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்தியும் மதுரையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால், தற்போது மீண்டும் புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்தும் கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. புதிய இத்திட்டத்தை கருத்துருவாக்கி செயல்படுத்த இன்னும் ஓரிரு ஆண்டுகளாகும். அதன்படி தற்போதைய 100 வார்டுகளுக்குரிய குடிநீர் தேவையை மட்டுமே புதிய திட்டத்தால் சமாளிக்கலாம். மதுரையில் தற்போதைய 15 லட்சம் மக்கள் தொகை என்பது 2034 ஆம் ஆண்டுக்குள் எப்படியும் 20 லட்சத்தை தாண்டும் நிலையில், இத்திட்டங்களால் கிடைக்கும் குடிநீர் போதுமானதாக இருக்காது என்பதே பொறியாளர்களின் கருத்து.
ஆகவே மதுரையின் குடிநீர் தேவையை வரும் 2034 ஆம் ஆண்டு வரை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையிலிருந்து நேரடியாக தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை பொறியாளர்கள் கூறுகின்றனர்.
திட்டம் சாத்தியமா?
மதுரைக்கு, குடிநீரை சேலம் மாவட்டம் மேட்டூரிலிருந்து கொண்டுவருவது சாத்தியமான திட்டமா? என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து மதுரை மாநகராட்சியில் உதவி நிர்வாகப் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்ற பி.அய்யனார் கூறியதாவது: மதுரை மற்றும் ராமநாதபுரம், திருமங்கலம் பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். குளித்தலை பகுதியிலிருந்து திருமங்கலம் வரை 230 கிலோ மீட்டர் குழாய் பதித்தே காவிரி நீர் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆகவே மேட்டூரிலிருந்து மதுரைக்கு சுமார் 450 கி.மீ. தூரம் குழாய் பதிப்பது சாத்தியமாகக்கூடியதே என்கிறார்.
தற்போதைய குடிநீர் அளவும்...எதிர்காலத் தேவையும்
மதுரை மாநகராட்சிக்கு தற்போது வைகை அணையின் இரு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தினமும் 115 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. அத்துடன் மேலக்கால், மணலூர், கோச்சடை ஆற்றுப்படுகையிலிருந்து 25 மில்லியன் லிட்டரும், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து 11 மில்லியன் லிட்டரும் என மொத்தம் 151 மில்லியன் லிட்டர் பெறப்படுகிறது.
மாநகராட்சி விதியின்படி தினமும் ஒருவருக்கு குறைந்தது 135 லிட்டர் தண்ணீரை விநியோகிக்க வேண்டும். ஆனால், தண்ணீர் வரத்தே அந்த அளவுக்கு இல்லை என்பதால், மூன்றாம் குடிநீர் திட்டமான முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் நேரடி தண்ணீர் திட்டத்தின் மூலம் 125 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய குடிநீர் திட்டம் மூலம் 125 மற்றும் பழைய திட்டங்கள் மூலம் 151 என மொத்தம் மதுரைக்கு 276 மில்லியன் லிட்டர் தினமும் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. புதிய குடிநீர் திட்டம் மூலம் மதுரையில் 20 லட்சம் பேருக்கு தினமும் குறைந்தது தலா 70 லிட்டர் தண்ணீரையாவது தினமும் விநியோகிக்கலாம் என்பதே மாநகராட்சியின் திட்டமாகும்.
ஆகவே மதுரை மாநகராட்சியில் இன்னும் 20 ஆண்டுகளுக்கான குடிநீர் தேவையை கருத்தில் கொண்டால், மேட்டூர் அணையிலிருந்து நேரடியாக குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி முன்வரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.