அங்கீகாரம் பெறாத படிப்புகள் மூலம் மாணவர்கள் வாழ்க்கையில் விளையாட அனுமதிக்கக்கூடாது என்று காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவைக் கூட்டத்தில் கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவைக்கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மு.வ.அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசினார். பின்னர் ஆட்சிப்பேரவைக்குழு உறுப்பினர்கள் பேசியது: பல்கலைக்கழகத்தில் வெளிப்படையான நிர்வாகம் நடைபெற வேண்டும். மாணவர்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையில் புதிய படிப்புகள் தொடங்க வேண்டும். அதே நேரத்தில் புதிய படிப்புகள் அங்கீகாரம் பெற்றவையாக இருக்கவேண்டும். தனியார் கல்லூரிகள் அங்கீகாரமற்ற புதிய படிப்புகளை தொடங்கி மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடக்கூடாது. எனவே புதிய பாடப்பிரிவுகளை தொடங்கும்போது பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றில் அனுமதி பெறவேண்டும். பல்கலைக்கழக தணிக்கைக்குழு தெரிவித்துள்ள ஆட்சேபனையால் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணப்பலன்கள், ஓய்வூதிய பலன்களை பெறமுடியவில்லை. எனவே இதில் துணைவேந்தர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி காலிப்பணியிடங்களை நிரப்புவதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது அதற்கு விடை காண வேண்டும் என்று உறுப்பினர்கள் வாதிட்டனர்.
இதையடுத்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த துணைவேந்தர், தணிக்கை ஆட்சேபனை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் உடனுக்குடன் உரிய ஆவணங்களுடன் தங்களது பதிலை சமர்ப்பித்தால், தணிக்கை ஆட்சேபணை நீக்கப்படும். பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ள விதிமுறைகளின்படியே பேராசிரியர்கள் நியமனம் நடைபெற வேண்டும் மீறும்பட்சத்தில் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றார்.
இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக நிதி நிலை அறிக்கை மற்றும் பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஆட்சிப்பேரவைக்கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில், பல்கலைக்கழக பதிவாளர் சின்னையா, தேர்வாணையர் ரவி, தொலைநிலைக்கல்வி இயக்குநர் விஜயதுரை மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.