தேனி அமமுக வேட்பாளர் தங்க. தமிழ்ச்செல்வன் ஜீப்பில் பறக்கும் படையினர் சோதனை
By DIN | Published On : 01st April 2019 06:16 AM | Last Updated : 01st April 2019 06:16 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே ஞாயிற்றுக்கிழமை தேனி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் தங்க. தமிழ்ச்செல்வன் வாகனத்தை சோதனையிட முயன்ற பறக்கும் படையினருக்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் அமமுக (டிடிவி தினகரன் அணி) சார்பில் தங்க. தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மஞ்சமலை அய்யனார் கோயிலில் தங்க. தமிழ்ச்செல்வன் ஞாயிற்றுக்கிழமை கட்சியினருடன் வழிபட்டார். பின்னர் கோயிலில் இருந்து பாலமேடு பகுதியில் வாக்குகள் சேகரிக்க அவர் சென்றார்.
அவருடன் கட்சியினர் 150-க்கும் மேற்பட்டோர் உடன் சென்றனர். பாலமேடு அருகே தங்க தமிழ்ச்செல்வனின் ஜீப்பை தடுத்து நிறுத்திய தேர்தல் பறக்கும் படையினர், ஜீப்பை சோதனையிட வேண்டும் என்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தங்க. தமிழ்ச்செல்வன், அதிமுகவினர் செல்லும் வாகனங்களை சோதனையிடாமல், அமமுகவினர் வாகனங்களை மட்டும் சோதனையிடுவது ஏன் என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து அமமுக கட்சியினரும் பறக்கும் படையினரை சூழ்ந்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பறக்கும் படையினர், கட்சி பாகுபாடின்றி வாகனச் சோதனையில் ஈடுபடுவதாகவும், அதிமுகவினர் வாகனங்களையும் சோதனையிட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து தங்க. தமிழ்ச்செல்வன் தனது ஜீப்பை அதிகாரிகள் சோதனையிட அனுமதியளித்தார். இதைத்தொடர்ந்து அவரது ஜீப்பில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் ஜீப்பில் பணம், பொருள் எதுவும் இல்லை என்று தெரிவித்து, தங்க. தமிழ்ச்செல்வன் பிரசாரத்தை தொடர அனுமதித்தனர்.
இதையடுத்து பாலமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்க. தமிழ்ச்செல்வன் வாக்குகள் சேகரித்தார்.