"பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் அதிமுகவுக்கு மக்கள் எதிர்ப்பு'
By DIN | Published On : 01st April 2019 10:05 AM | Last Updated : 01st April 2019 10:05 AM | அ+அ அ- |

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளதால் அதிமுகவுக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்று திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் பேசினார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். மதுரை நகர் மற்றும் ஊரகப்பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ள சு.வெங்கடேசன், மதுரை சோலையழகுபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்டார். இதில் சு.வெங்கடேசனை ஆதரித்து திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெங்கடேசனுக்கு கலைஞர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளோம். அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. நாம் மதவாதிகள் அல்ல என்பதை இந்தத் தேர்தல் மூலம் மதவாத சக்திகளுக்கு உணர்த்த வேண்டும். வாக்காளர்கள் தீமையின் பக்கம் நிற்காமல் நன்மையின் பக்கம் நிற்க வேண்டும். எதிரணியினர் தோற்பார்கள் என்று விட்டுவிடக்கூடாது. அவர்கள் மிகவும் மோசமாக தோற்க வேண்டும். மதுரையில் பள்ளிவாசலுக்கு வாக்கு கேட்டுச் சென்ற அதிமுக அமைச்சருக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவை மக்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள். தமிழகம், புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.