மக்களவைத் தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு சௌராஷ்ட்ரா முன்னேற்றக் கழகம் ஆதரவு
By DIN | Published On : 01st April 2019 06:18 AM | Last Updated : 01st April 2019 06:18 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் அ.திமு.க. - பாஜக கூட்டணிக்கு சௌராஷ்டரா முன்னேற்றக் கழகம் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்ததுள்ளது.
சௌராஷ்டரா முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்து சௌராஷ்ட்ரா சமூக அமைப்புகள் சார்பில் மக்களவைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரை தெப்பக்குளம் அருகில் உள்ள சௌராஷ்ட்ரா கிளப் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பது, 40 தொகுதிகளிலும் அதிமுக- பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், அதற்கான ஆதரவு கடிதத்தை, சௌராஷ்ட்ரா முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வி.ஜி.ராமதாஸ், கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ மற்றும் ஆர்.பி. உதயகுமார் ஆகியோரிடம் வழங்கினார். அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு அந்தந்த கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு கடிதம் வழங்கப்பட்டது. இதையடுத்து கூட்டத்தினர் முன்பாக அதிமுக வேட்பாளர் வி.வி.ஆர். ராஜ்சத்யன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். தொடர்ந்து ராஜ்சத்யன் சௌராஷ்ட்ர மொழியில் பேசி வாக்குகளை சேகரித்தார்.
பின்னர் சௌராஷ்ட்ர முன்னேற்ற கழகத்தின் தலைவர் வி.ஜி.ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தமிழகத்தில் மதுரை, திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சௌராஷ்ட்ர இனமக்கள் 24 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே முகமாக வாக்களித்தால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக இருப்பார்கள். சௌராஷ்ட்ர சமூகத்தில் 80சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர். அவர்களின் பிரதான நெசவு தொழில் நலிவடைந்து வருகிறது. அதனைக் காப்பாற்ற அரசுகள் முன்வர வேண்டும். சௌராஷ்ட்ர சமூகத்திற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும். வருங்காலங்களில் நடைபெறும் தேர்தலில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் 4 எம்.எல்.ஏ. தொகுதிகளை ஒதுக்கீடு செய்யவேண்டும்.
சௌராஷ்ட்ர சமூகத்திற்கு தற்போது மத்திய மாநிலஅரசுகள் உரிய பாதுகாப்புகளை வழங்கி வருகிறது. ஆனால் கடந்த கால அரசுகளால் கடுமையான பாதிப்புகளை அடைந்துள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நாடு நல்ல முன்னேற்றமடைந்துள்ளது. நரந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகவேண்டும் என்ற ஒருமித்த கருத்துடன் இருக்கும் அதிமுகவுக்கு எங்கள் சௌராஷ்ட்ர சமூகத்தின் ஆதரவை முழுமையாக அளித்துள்ளோம் என்றார்.
கூட்டத்தில் மதுரை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.எஸ். சரவணன், வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா, பாஜக மாநிலச்செயலர் ஸ்ரீனிவாசன், மக்களவை முன்னாள் உறுப்பினர் ஏ.ஜி.எஸ்.ராம்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.