மதுரையில் மாநகராட்சி கழிப்பறைகளை அமைக்க வேண்டும்: நுகர்வோர் பாதுகாப்பு மையம் தீர்மானம்
By DIN | Published On : 01st April 2019 10:06 AM | Last Updated : 01st April 2019 10:06 AM | அ+அ அ- |

மதுரை நகரில் மாநகராட்சி கழிப்பறைகளை அமைக்க வேண்டும் என மதுரை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், உலக நுகர்வோர் தினவிழா மதுரை ஐஎம்ஏ அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் மதுரை மாநகராட்சி குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும். வீட்டு வரி உயர்வை குறைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரியை குறைக்க அல்லது ரத்து செய்ய வேண்டும். சாலைகளில் உள்ள வேகத்தடைகளை ஐஆர்சி வழிகாட்டுதல்படி அமைக்க வேண்டும். சாலை நடுவே வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும். மதுரையில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மதுரை நகரில் செயல்படுத்தப்பட்டு வரும் சீர்மிகு நகர் திட்டத்தை நிர்ணயித்துள்ள காலகெடுவிற்குள் முடிக்க வேண்டும். மதுரை நகரில் நிலத்தடி நீர்மட்டம் உயரவும், கொசு தொல்லையில் இருந்து தப்பவும் கால்வாய்களில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரிட் தளத்தை அகற்ற வேண்டும். அனைத்து வார்டுகளிலும் தேவைப்படும் இடங்களில் இலவச கழிப்பறை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இவ்விழாவில், பொதுச் செயலர் ஜி.முனியசாமி, தலைவர் எஸ்.தமிழரசன், மாவட்ட சட்டப்பணிக்குழு செயலர் டி.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பேசினர்.