வேட்பாளர்கள் தேர்தல் செலவுகள்:ஏப்.2-இல் ஆய்வுக்கூட்டம்
By DIN | Published On : 01st April 2019 10:04 AM | Last Updated : 01st April 2019 10:04 AM | அ+அ அ- |

மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவின பதிவேட்டை ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெற உள்ள முதற்கட்ட ஆய்வுக்கூட்டத்தில் தேர்தல் செலவின ஆய்வாளர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் தொடர்பான பதிவேட்டை ஆய்வு செய்வதற்கான கால அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.
அதில், தேர்தல் செலவுக் கண்காணிப்புக்கான அறிவுரைகளின்படி, வேட்பாளர் தாமாக அல்லது அவருடைய தேர்தல் முகவர் மூலமாகவோ அல்லது அவர் உரிய அனுமதி அளித்த வேறு ஒருவர் மூலமாகவோ, செலவு விவர ஆய்வாளர் அல்லது தேர்தல் செலவுகளை ஆய்வு செய்வதற்காகவே நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி முன்பு தனது தேர்தல் செலவுகள் குறித்த பதிவேட்டை குறைந்தது மூன்று முறை தாக்கல் செய்ய வேண்டும் என்று விதிகளில் உள்ளது. அதன்படி ஏப்ரல் 2, 9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தேர்தல் செலவின ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவினப் பதிவேட்டை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், இதர வேட்பாளர்கள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.