வைகை ஆற்றின் ஆக்கிரமிப்பு அகற்றப்படும்: மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் வாக்குறுதி
By DIN | Published On : 01st April 2019 10:04 AM | Last Updated : 01st April 2019 10:04 AM | அ+அ அ- |

வைகை ஆற்றின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், வழக்குரைஞருமான எம்.அழகர், பொது மக்களிடம் வாக்குறுதி அளித்து வாக்குச் சேகரித்தார்.
மதுரை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டுவந்த அழகர் ஞாயிற்றுக்கிழமை ஊரகப்பகுதிகளில் பிரசாரம் செய்தார். இதையடுத்து பரவையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு அவர் பிரசாரத்தை தொடங்கினார். வாக்கு சேகரிப்பின்போது, அப்பகுதி மக்கள் வைகை ஆற்றை ஒட்டிய பகுதியாக இருந்தாலும், தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அதற்கு என்னை வெற்றி பெறச் செய்தால், வைகை ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்படும். குடிநீர் தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார். பரவையில் தொடங்கிய பிரசாரப் பயணம் பரவை காலனி, ஊர்மெச்சிகுளம், கோவில்பாப்பாகுடி, கூடல்நகர், விளாங்குடி, கரிசல்குளம், பெத்தானியாபுரம், கோச்சடை, சொக்கலிங்க நகர், எச்எம்எஸ் காலனி, பாண்டியன் நகர் உள்ளிட்டப் பகுதிகளில் நடைபெற்றது.
இதில் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் வி.பி.மணி, வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் எம்.ஐயூப்கான், தொகுதிப் பொறுப்பாளர்கள் முருகன், பாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.