அமமுகவின் பரிசுப்பெட்டி சின்னம் காலிப் பெருங்காய டப்பா: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ
By DIN | Published On : 01st April 2019 10:06 AM | Last Updated : 01st April 2019 10:06 AM | அ+அ அ- |

அமமுகவின் பரிசுப் பெட்டி சின்னம் காலிப் பெருங்காய டப்பா என அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.
மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ் சத்யனை ஆதரித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஆலாத்தூர் பகுதியில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார். பின்னர்அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்கு சேகரிப்பின் போது அதிமுக வேட்பாளருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் மதுரையில் மு.க.ஸ்டாலின் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே மக்கள் எழுந்து சென்று விட்டனர். திமுக தோல்வியின் விளிம்பில் உள்ளது. ஸ்டாலின் பிரசாரம் செய்து எங்களுக்கு வாக்குகள் வாங்கி கொடுக்கிறார். அதிமுகவுக்கு சிறுபான்மை வாக்குகள் கிடைக்காது என்பது தவறான கருத்து. தமிழகம் முழுவதும் சிறுபான்மையினர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அமமுகவினர் ஏற்கெனவே பரிசு கொடுத்து பழக்கப்பட்டவர்கள். ரூபாய் நோட்டை கொடுத்து ஓட்டை பெற்றவர்கள்.
எனவே பரிசுப் பெட்டி என்று சொல்லி அதற்குள் எதையாவது வைத்து கொடுக்கலாம். எனவே அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வாகனத்தில் சோதனையிட்டதில் தவறு எதுவும் இல்லை. டி.டி.வி. தினகரனும் அவரது கட்சியும் இன்று களத்தில் இல்லை என்பதுதான் உண்மை. எனவே அமமுக சின்னம் பரிசுப்பெட்டி இல்லை. காலி பெருங்காய டப்பா மட்டுமே என்றார்.
முன்னதாக அதிமுக வேட்பாளர் விவிஆர் ராஜ் சத்யன், டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டரங்குக்கு சென்று அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் பிரசாரத்தில் ஈடுபட்டதோடு அவர்களுடன் இணைந்து கூடைப்பந்தாட்டத்திலும் பங்கேற்றார். மாலையில் பரவை உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார்.