காவல், ஆவின் வாகனங்கள் மூலம் பணப்பட்டுவாடா: ஈவிகேஎஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு
By DIN | Published On : 11th April 2019 07:35 AM | Last Updated : 11th April 2019 07:35 AM | அ+அ அ- |

காவல்துறை வாகனங்கள், ஆவின் வாகனங்கள் மூலம் அதிமுக நடத்தும் பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை என்று தேனி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தேனி மக்களவைத் தொகுதியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்துக்கு மத்தியில், மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமியை புதன்கிழமை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி பேராயரிடம் கோரிக்கை விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஈவிகேஎஸ். இளங்கோவன் கூறியது: தேனி மக்களவைத்தொகுதியில் பணம் கொடுக்கும் வேட்பாளரிடம் இருந்து மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு கை சின்னத்துக்கு தான் வாக்களிப்பார்கள். தேனி மாவட்டத்தின் பிரச்னையே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அவருடைய மகனும் தான். தற்போது தேர்தல் ஆணையம் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் சாதகமாக செயல்பட்டு வருகிறது. காவல்துறை வாகனம், ஆவின் பால் வாகனம் மூலம் பணம் கொண்டு செல்லப்படுகிறது. இதை தேர்தல் ஆணையம் தடுப்பது இல்லை.
தேனி மக்களவைத் தொகுதியில் எனது பெயர் அறிவிக்கப்பட்டவுடனேயே எனது வெற்றி உறுதிசெய்யப்பட்டு விட்டது. தேனிக்கு பிரசாரத்துக்கு வர இருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பார்க்க தேனி மாவட்ட மக்கள் மிக ஆவலாக உள்ளனர் என்றார்.