நுரையீரலில் சிக்கிய குண்டூசி அகற்றம்: வேலம்மாள் மருத்துவமனை சாதனை
By DIN | Published On : 17th April 2019 06:09 AM | Last Updated : 17th April 2019 06:09 AM | அ+அ அ- |

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் நுரையீரலில் சிக்கிய குண்டூசியை மருத்துவர்கள் நவீன கருவிகள் மூலம் செவ்வாய்க்கிழமை அகற்றினர்.
மதுரை வேலம்மாள் சிறப்பு மருத்துவமனையில், 35 வயதுள்ள ஆண் ஒருவர் குண்டூசி விழுங்கிவிட்டதாக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்ததில் 1.5 அங்குல குண்டூசி இடது பக்க நுரையீரலில் சிக்கி இருப்பது தெரியவந்தது. குண்டூசியை உடனடியாக அகற்ற நவீன சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து ப்ரோன்கோஸ்கோப்பி என்னும் நவீன உபகரணத்தை கொண்டு ஆய்வு செய்து, சி-ஆர்ம் என்னும் கருவி மூலம் இரண்டு மணி நேரம் நடைபெற்ற சிகிச்சையில் குண்டூசி செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது.
சிகிச்சை குறித்து சிறப்பு மருத்துவர் பிரேம் ஆனந்த் கூறியது: நவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டதால் ஆபத்தான அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட்டது. நோயாளி சிகிச்சைக்கு பின் உடனே சகஜ நிலைக்கு திரும்பினார். இந்த நவீன கருவி மூலம் புற்றுநோய், நிமோனியா சளியுடன் வரும் ரத்தம் போன்ற பல்வேறு நோய்களை கண்டறியவும், நுரையீரலை துல்லியமாக பரிசோதிக்கவும் முடியும். இது போன்ற நவீன கருவிகள் வேலம்மாள் மருத்துவமனையில் உள்ளதால் பாதிப்புகளை சிறப்பாக கையாள முடியும் என்றார்.
இந்த சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த மருத்துவர் ஆழ்வார் ராமானுஜம் மற்றும் மருத்துவ குழுவினரை வேலம்மாள் கல்விக் குழும தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம், டீன் ர.ராஜா முத்தையா ஆகியோர் பாராட்டினர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...