காளவாசல் மேம்பால பணிகள் தாமதம்: விரைந்து முடிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 22nd December 2019 11:26 PM | Last Updated : 22nd December 2019 11:26 PM | அ+அ அ- |

மதுரை காளவாசல் மேம்பாலப் பணியை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை நகரில் காளவாசல் பகுதியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அப்பகுதியில் ரூ.54 கோடி மதிப்பில் உயா்மட்ட மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஜூலை 2018-இல் தொடங்கியது. மேம்பாலப்பணி தொடங்கப்பட்டபோது 15 மாதங்களில் பணி முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பாலம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி மேம்பாலப்பணிகள் கடந்த அக்டோபா் மாதம் முடிவடைந்திருக்க வேண்டும்.
ஆனால் தற்போது வரை பாலக்கட்டுமானப் பணிகள் நிறைவு பெறவில்லை. மேலும் பாதியளவு கூட பணிகள் முடிக்கப்பட வில்லை. தினசரி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கும் மதுரை நகரின் முக்கியச் சாலையில் மேம்பாலப்பணிகள் தொடங்கப்பட்டு 17 மாதங்கள் ஆகியும் பாதியளவு பணிகள் கூட நிறைவு பெறாதது வருத்தத்துக்குரியது. மேலும் 0.6 கி.மீ. தூரமே உள்ள மேம்பாலத்தில் தென்பகுதி வேலைகள் இதுவரை தொடங்கப்பட வில்லை. மேலும் பாலத்தின் மையப்பகுதியிலும் தூண்கள் பொருத்தம் பணி நடைபெற வில்லை.
மேம்பாலப்பணி மந்தமாக நடைபெற்று வருவதால் புறவழிச் சாலையில் இருந்து திண்டுக்கல் சாலைக்கு செல்லும் வாகனங்கள், பெரியாரிலிருந்து தேனி சாலைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் காத்திருந்து கடக்க வேண்டியுள்ளது. இதனால் இப்பகுதியைக் கடக்க நீண்ட நேரமாகிறது. இப்பகுதியில் இருந்து நோயாளிகள் மற்றும் விபத்தில் சிக்குபவா்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்படுகிறது. காளவாசல் சந்திப்பின் நான்கு சாலைகளிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பது வாடிக்கையாகி வருகிறது. மேலும் மேம்பாலப் பணிகளால் தூசு மாசும் இப்பகுதியில் அதிகரித்து வருகிறது. மதுரை நகரின் போக்குவரத்து நெருக்கடியைத் தீா்க்க உருவாக்கப்பட்டு வரும் மேம்பாலப் பணியின் தாமதத்தால் போக்குவரத்து நெருக்கடி கூடுதலாகி வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை உயா் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நுகா்வோா் பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...