கல்வியே சவால்களை சமாளிக்கும் வலிமையை தரும்: உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.வெங்கட்ராமன்
By DIN | Published On : 12th February 2019 07:26 AM | Last Updated : 12th February 2019 07:26 AM | அ+அ அ- |

மாணவர்களுக்கு கல்வியே வெளி உலகில் சவால்களை சந்திக்கும் வலிமையை தரும் என உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.வெங்கட்ராமன் பேசினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 52-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மு.வ.அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.வெங்கட்ராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
பட்டங்களை பெறுவதன் மூலமாக மாணவர்களின் நிலை மாற்றம் பெறுகிறது. ஒருவர் பட்டம் பெறுவதன் மூலமாக மிகப்பெரும் பொறுப்புணர்ச்சிக்கு மாற்றமடைகிறார். மாணவர்கள் பாதுகாப்பான சூழல், ஆசிரியர்களின் வழிகாட்டுதல் இவற்றில் இருந்து விடுபட்டு வெளி உலகுக்கு செல்கிறீர்கள். போட்டிகள் நிறைந்த உலகில் பல்வேறு சவால்களை மாணவர்கள் சந்திக்க நேரிடும். அத்தகைய சூழலில் மாணவர்கள் கற்ற கல்வியே வெளி உலக சவால்களை சந்திக்கும் வலிமையைத் தரும். வெறும் உலோகத் தகட்டின் விலை ரூ.250 மட்டுமே. ஆனால் அதே இரும்பைக் கொண்டு தயாரிக்கப்படும் குதிரை லாடம் ரூ.1000 மாக மதிப்பு கூடுகிறது. அதே இரும்பின் மூலம் தயாரிக்கப்படும் ஊசிகள் ரூ.10 ஆயிரம் மதிப்பு வாய்ந்தவை. ஆனால் கடிகாரத்தில் பயன்படும் ஸ்பிரிங்குகளின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதைப்போன்றே உங்களின் மதிப்பீட்டை உங்களால் உணர முடியாது. ஆனால் கல்வியின் வாயிலாக அந்த திறமையை உணரும் தன்மையை பெற முடியும். எனவே, வாழும் காலம் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்றார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தற்போது 20 புலங்களில் 77 துறைகளுடன் செயல்படுகிறது. 2018 ஆம் ஆண்டின் தரவரிசை பட்டியலில் 77-ஆவது இடத்தில் இருந்து 54-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பல்கலைக்கழகம், நார்வே எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனம், உகாண்டா தமிழ்ச் சங்கம் உள்பட 20 சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றார்.
விழாவில், மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன், தென் மண்டல காவல்துறைத்தலைவர் கே.பி.சண்முகராஜேஸ்வரன், மதுரை சரக துணைத்தலைவர் பிரதீப்குமார், பல்கலைக்கழக பதிவாளர் சின்னையா, சிண்டிகேட் குழு உறுப்பினர்கள், துறைத்தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
மனுகொடுக்க முயன்ற 3 பேர் கைது: முன்னதாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி, பல்கலைக்கழக வளாகத்தில், தமிழக ஆளுநரிடம் மனு கொடுப்பதற்காக காத்திருந்த மதுரை ஆனையூரைச் சேர்ந்த காந்தி உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
53,914 மாணவர்களுக்கு பட்டம்
விழாவில், அறிவியல் புலத்தில் 244 பேர், கல்வியியல் புலம் 9 பேர், வணிகவியல் புலம் 82 பேர், நிர்வாக மேலாண்மையியல் புலம் 32 பேர், கலை புலம் 195 பேர் என 564 பேருக்கு முனைவர் பட்டங்களும், 70 பேருக்கு பல்கலை. அளவிலான பதக்கங்களையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.
இதுதவிர, காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பை முடித்த 53,914 பேரும் பட்டங்கள் பெற்றனர்.