குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மதுரை மாணவர்களுக்குப் பாராட்டு
By DIN | Published On : 12th February 2019 07:25 AM | Last Updated : 12th February 2019 07:25 AM | அ+அ அ- |

புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற மதுரை என்சிசி மாணவர்கள் திங்கள்கிழமை பாராட்டப்பட்டனர்.
அமெரிக்கன் கல்லூரி 2-ஆம் ஆண்டு வணிகவியல் மாணவர் அகஸ்டின் ஜெபக்குமார், தியாகராஜர் கல்லூரி கணிதவியல் துறை 2-ஆம் ஆண்டு மாணவர் டேனியல் ரோஷன் ஆகியோர் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்றனர். இவர்கள் என்சிசி மதுரை கடற்படை பிரிவில் பயிற்சி பெற்றவர்கள்.
தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபர் என்சிசி அணி சார்பில் இவர்கள் இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, அமெரிக்கன் கல்லூரி இயற்பியல் துறை 2-ஆம் ஆண்டு மாணவரான லோகேஷ்வர், குடியரசு தினத்தையொட்டி தில்லியின் என்சிசி மாணவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்றார்.
அதில் போர்க் கப்பல் செய்யும் போட்டியில் தங்கப் பதக்கமும், பாய்மரக் கப்பல் தயாரிப்புப் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
தில்லியில் இருந்து மதுரை திரும்பிய இந்த 3 மாணவர்களுக்கும் மதுரை என்சிசி குரூப் சார்பில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, கடற்படை என்சிசி கமாண்டிங் அதிகாரி வி.பி.செந்தில் 3 மாணவர்களையும் பாராட்டி வாழ்த்தினார்.