காரில் கடத்தி வந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல்: ஓட்டுநர் கைது
By DIN | Published On : 12th February 2019 07:23 AM | Last Updated : 12th February 2019 07:23 AM | அ+அ அ- |

மதுரையில் காரில் கடத்தி வந்த 5 கிலோ கஞ்சாவை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனர்.
மதுரை கீரைத்துறை பகுதியில் காரில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் சார்பு ஆய்வாளர் அருண் தலைமையிலான போலீஸார் வாழைத்தோப்பு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், காரில் 5 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
அதையடுத்து காரை ஓட்டி வந்த கோவை மாவட்டம், லட்சுமி நகரைச் சேர்ந்த நாகார்ஜூனை (24) போலீஸார் கைது செய்தனர். மேலும் கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
உசிலம்பட்டியில் பெண் கைது: உசிலம்பட்டியில் கஞ்சா வைத்திருந்த பெண்ணை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
உசிலம்பட்டி பகுதிகளில் சார்பு-ஆய்வாளர் குணசீலன் தலைமையிலான போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் கட்டத்தேவன்பட்டியைச் சேர்ந்த பஞ்சம்மாள் (58), சந்தேகத்துக்கிடமாக நின்றுகொண்டிருந்தார்.
அதையடுத்து போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவரிடம் 2.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதையடுத்து கஞ்சா மற்றும் ரூ.52, 270 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, பஞ்சம்மாளை கைது செய்தனர்.