அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை தொழில்நுட்பனர்களுக்கு பணி வழங்க வேண்டும்: சங்க பொதுக்குழுவில் தீர்மானம்
By DIN | Published On : 04th January 2019 07:42 AM | Last Updated : 04th January 2019 07:42 AM | அ+அ அ- |

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவசர சிகிச்சை தொழில்நுட்பனர் படிப்பு முடித்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப்பிரிவு, தீவிர சிகிச்சைப்பிரிவில் பணி வழங்கவேண்டும் என்று தொழில்நுட்பனர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அவசர சிகிச்சை தொழில்நுட்பனர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து அவசர சிகிச்சை தொழில்நுட்பனர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த 2005-இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அவசர சிகிச்சை தொழில்நுட்பப் படிப்பு தொடங்கப்பட்டது.
இந்த படிப்பு முடித்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் பணி அமர்த்தப்பட வேண்டும். ஆனால் அவசர சிகிச்சை படிப்பை முடிக்காத, தகுதியற்றவர்கள் மட்டுமே தற்போது வரை நியமிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக அரசு சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த 12 ஆண்டுகளில் 2500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அவசர சிகிச்சை தொழில்நுட்பனர் படிப்பை முடித்துள்ளனர். மேலும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் முறையாக பதிவும் செய்துள்ளனர். ஆனால் அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை தொழில்நுட்பனர் பணியிடங்கள் வழங்கப்படுவது இல்லை. எனவே தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை தொழில்நுட்பனர்கள் பணியிடங்களை உருவாக்கி, அதில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் அவசர சிகிச்சை தொழில்நுட்பனர் படிப்பு முடித்தவர்களை பணியமர்த்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.