ஆட்சியரே விழாத் தலைவராக செயல்பட்டு ஜல்லிக்கட்டை நடத்தலாமே: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து
By DIN | Published On : 04th January 2019 07:38 AM | Last Updated : 04th January 2019 07:38 AM | அ+அ அ- |

மதுரை மாவட்ட ஆட்சியரே, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவின் தலைவராகச் செயல்பட்டு, அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து ஜல்லிக்கட்டை நடத்தலாமே என உயர்நீதிமன்ற நீதிபதி வியாழக்கிழமை கருத்து தெரிவித்தார்.
மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த சிலர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனு: மதுரை அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்பர். நிகழாண்டு ஜன. 15ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதியும், தேவையான காவல்துறை பாதுகாப்பும் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
இந்நிலையில், மற்றொரு தரப்பினர் சார்பில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியிருப்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு விழாக் குழுவின் தலைவராக இருந்து வருகிறார். இவர், கணக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை. யாரையும் கலந்தாலோசிப்பதில்லை. தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறார். இந்நிலை தொடர்ந்தால், ஜல்லிக்கட்டை அனைவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் நடத்தும் நிலையும், பங்கெடுப்பும் குறையும்.
எனவே, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம மக்களின் பங்கெடுப்புடன் கூடிய விழாக் குழுவை அமைத்து ஜல்லிகட்டு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, மாவட்ட ஆட்சியரே ஜல்லிக்கட்டு விழாக் குழுவின் தலைவராக செயல்பட்டு, அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து விழா நடத்தலாமே என கருத்து தெரிவித்தார்.
மேலும், ஜல்லிக்கட்டை அமைதியான முறையில் நடத்துவது தொடர்பான பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய இருதரப்பு வழக்குரைஞர்களுக்கும் உத்தரவிட்டு வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு (ஜன. 7) ஒத்திவைத்தார்.